உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




298

அப்பாத்துரையம் - 24

தோல்வியடைந்தால் கூட, அது அவர்கள் தனிப்பட்ட தோல்வியாக மட்டுமே இருக்கும். உலகத்துக்கு அத்தோல்விகளே பெருவெற்றிகளாயமையும். ஆனால் அவர்கள் வெற்றிகளும் அவர்கள் தனி வெற்றிகளாகமட்டும் இருக்கமாட்டா உலகத்துக்கும் அவை பெருவெற்றிகள் ஆகும். இதுமட்டுமன்று. அவர்கள் உலகுக்காக வாழ்பவராதலால், அவர்கள் தனி வெற்றியும் உலக வெற்றியாகவே முடியும். இம்முறையில் சான்றோர் வெற்றி உலகுக்குப் பன்மடங்கு பெருக்கமும் வளமும் உடைய நிறை வெற்றியாகும்.

உலக நோக்குடன் ஒருவன் தன்நோக்கையும் கருத்தையும் உயர்த்துவதனாலேயே, தனி ஒரு மனிதன் உயர்வு பெற, அதே சமயம் பலரும் உயர்வுற்று, அவன் உயர்வைப் பலர் பாராட்டும் நிறைவெற்றி நாடி அவன் செல்ல முடியும். இவ்வெற்றி அடைய அவனுக்குத் தன் சூழலால் விளையும் சிற்றவாக்களை மறுக்கும் தன்மறுப்பு மட்டுமின்றி, தன் தனிநலம் மறுத்த தன்மறுப்பும் தேவைப்படும்.தன்னடக்கம், தன்மறுப்பு ஆகிய இவ்விரண் டாலும் மனிதன் நொய்மைகள், அடிமைப் பண்புகள், அவலத் தன்மைகள் ஆகிய யாவும் அகலும். இதனால் அவன் தோல்விகள் கூடப் பிறர் வெற்றியைவிட உயர்வுடையவை ஆகும்.அவன் குற்றங் குறைவுகள் கூடப் பிறர் குணச்சிறப்புக்களை மங்கவைக்கத் தக்கவையாகும்.

ஒரு

தன் இன்பநாட்டத்தையும் தன் நலத்தையும் ஒருவன் அறவே விட்டொழித்தால்தான் பொதுநல நோக்கு ஏற்படும் என்று கொள்வது தகாது. ஏனென்றால் பொதுநலத்துள் தன்னலமும் ஒரு உறுப்பே. தன்னலத்திலும் இன்பநாட்டம் பகுதியே. அவன் அடக்க வேண்டியது, மறுத்தொழிக்க வேண்டியது பொதுநலத்துக்கு மாறான தன்னலத்தையும் தன்னலத்துக்கு மாறான இன்ப நாட்டத்தையும், பெருநலத்துக்கு மாறான சிறு நலனையும் தீங்குக்கு விதையான போலி நலங்களையும் மட்டுமே. அதாவது அவன் பேணும் தன்னலத்தில் பொதுநலக்கூறான உண்மையான தன்னலம் இருக்க வேண்டும். அதற்கு மாறான தற்பற்று அல்லது தனிநலம் இருக்கக்கூடாது.

தீமைகள் என வகுக்கக்கூடிய இன்ப துன்பப் பண்புகள் பல. அவை அனைத்தும் அறியாமையின் பயனாக இக்குறுகிய தற்பற்றின் விதையிலிருந்து தோன்றிய களைகளே என்னலாம்.