காதல் மயக்கம்
79
என்றிருப்பவர்கள் இத்தெய்வத்திற்கு மட்டும் காணிக்கை செலுத்திவிட்டால், வேண்டாத பிள்ளைக்குத் தடையுத்தரவு போடப்பட்டுவிடும். வேண்டாதபிள்ளை தடையுத்தரவை மீறித்துணிந்து உலகுக்குள் வந்துவிட்டால், அதை வந்த உலகுக்கு மீண்டும் அனுப்பிவிடவும் அவள் தயங்கமாட்டாள்.
சீதை பிள்ளை வேண்டுமென்று தவங்கிடக்கவில்லை; ஆயினும் வந்தபின் வேண்டாமென்றும் கூறவில்லை. என்றாலும் பேறுகாலச் செலவுகளுக்குத் திண்டாடும் அவளிடமிருந்து நங்கி காணிக்கை எதனையும் எதிர்பார்ப்பதற்கில்லை. இந்நிலையில் ஏதோ அறிமுகமில்லாத ஒருவன் கையில் முன்பணமும் வைத்து, கூடுதல் பணம் தரும் உறுதியும் கூறி, ஒரு பிள்ளை வேண்டும் என்ற கூறியபோது அவள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள். அறிமுகமில்லாத பக்தன் வேறுயாருமில்லை, இராமுதான். வெளிப்படையாக நங்கி போன்ற கீழ் மக்களுடன் உறவு வைத்துக்கொள்ள அஞ்சி அவன் அவளுடன் மாற்றுருவில் பேரம் செய்திருந்தான்.
சீதையின் வீட்டுக்குப் பின்பக்கமிருந்த ஊர்ப்புறக் காட்டில் இரவு முழுதும் பனியில் காத்திருந்து இராமு இயற்றிய தவம் விடியற்காலை வேளையில் பயன் தந்தது.பொற்பதுமைபோன்ற குழந்தை ஒன்றும் நன்றாக உறங்கும் நிலையில் அவன் கையில் வந்து சேர்ந்தது.
உ
இதுவரையில் தனக்குக் காணிக்கை தரும் பக்தன் யார், அவன் நிலைமை என்ன என்று அறிய 'நங்கித்' தெய்வம் கவலைப்படவில்லை. ஆனால் பெறக்கூடும் காணிக்கை முற்றும் பெற்றபின் இவ்வாராய்ச்சியைச் சற்றுத் தொடங்கினாள். "நீங்கள் யார், குழந்தையை எதற்காக, எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று அவள் உசாவினாள். இராமுவுக்கு இதற்கு விடை கூறுவது சற்றுத் தொல்லையாகவே இருந்தது. ஆயினும் காரியம் இவ்வளவு கைகூடியபின் இனித் தயக்கம் கூடாதென்று எண்ணி துணிந்து பொய் கட்டினான். “நான் ஒரு ஆண்டி, கோயில் திருப்பணிகளிலும் சமயப் பணிகளிலும் ஈடுபட்டவன். இப்பணியைத் தொடர்ந்து செய்யப் பழிபாவமறியாத பருவத்திலிருந்தே ஓர் உயிரை எடுத்து வளர்த்துப் பழக்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன்,” என்றான்.