உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 25

அடிக்கடி 'குழந்தை காணாமற் போனதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. அது உயிருடன் எங்காவது வளர்ந்தால் போதும்' என்பாள். அவளுடன் இருந்த பெண்களும் “உயிருடன் கட்டாயம் இருக்கும் அம்மா! யாராவது கொண்டு போகிற வர்கள் வளர்க்கத்தானே கொண்டுபோயிருப்பார்கள். குழந்தை யிடம் நகை முதலிய எதையாவது எண்ணிக் கொண்டுபோகவோ வழிகிடையாது. ஆகையால், நமக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான். அதற்குக் கட்டாயம் நன்மை தான் கொடுத்து வைத்திருக்கும்” என்பார்கள்.

சீதையிடம் பெண்கள் கூறிய தேறுதலுரைகள் பொய் யாகப் போகவில்லை. வறுமையிடையே பிறந்த குழந்தை, செல்வத்திடையே கண் விழித்தது. பல தடவை 'சூலி' யெனப் பொய் நடிப்பு நடித்த கங்குவோ, பத்து மாதக் கர்ப்பம், பேறு காலத்துன்பம் ஆகிய எதுவுமின்றி, ஒரு பத்துநாழிகைக் கவலை மட்டிலும்பட்டு ஒரு பிள்ளைக்குத் தாயானாள். பிள்ளைக்கு அலைந்த அவள் உள்ளத்தில் தாயின் இயற்கையன்பு இருந்தது. தாய் மாறியதை அறியாத குழந்தைக்கு அவள் 'பெற்றதாய்’ போலவே ஆய்விட்டாள். தாயின் அரவணைப்பில் மகிழ்வது போலவே அது அவள் அரவணைப்பிலும் மகிழ்ந்தது.

தாயின் மகிழ்ச்சி கண்ட அவளுக்கும் சில சமயம் கணவன் மனத்தில் தோன்றிய பழிபாவஅச்சம் தோன்றும். ஆனால் குழந்தையின் ஒரு முத்தம், அதன் அயர்ந்துறங்கும் முகத்திற் காணப்படும் ஒரு 'நரிவிரட்டு' அதனைப்பறக்கடித்துவிடும். அச்சமயங்களில் அவள் “பழியாம், பாவமாம்! இவ்வின்பத்துக்கு முன் அவை எம்மட்டு? இதற்காக அரசாங்கமே என்னைச் சிறையிட்டாலும், தூக்கிலிட்டாலும் கூட, நான் கழிவிரக்க மடையமாட்டேன். அத்தனை துன்பத்துக்கும் இத்தங்கக் கனியின் ஒரு முத்தம் போதிய விலை ஆகும்!” என்று குழந்தையை உச்சி மோந்து மகிழ்வாள்.

ஊராருக்குக் கங்கு பிள்ளைப் பெற்றதில், அதுவும் நோய் நொடியற்று, நல்ல பிள்ளையாகப் பெற்றெடுத்ததில் சற்று வியப்புத்தான். ஆனால் அது முற்றிலும் பொய் என்று எவரும் கனவிலும் நினைக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.