உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 25

பயன்படுத்தினான். வஞ்சகர்கள் ஏதாவது செய்தி பற்றி உளவறிய வந்தால், முழுப் பொய்கூறி அவர்களை ஏமாற்றுவதில் அவனுக்கு மிகவும் விருப்பம். கோள், பிறர் செயலில் தலையீடு ஆகியவற்றில் ஈடுபட்ட பல ஊர்ப்புறஞ் சுற்றிகள் அவன் செல்லு மிடமறிய விரும்புவர். அவன் செல்லாத இடமே சொல்லி அவர்களை அலையவைப்பான். நாளடைவில் நம்பமுடியாத சொல்லுக்குக் 'கோமான் வாய் உரை' என்ற பெயர் அவ்வூரில் ஏற்பட்டது.

கோமான் கோட்பாடுகள் ஊரில் ஒருவகையான வெறுப்பைப் பல இடங்களில் உண்டு பண்ணினாலும், அது அவன் வாழ்க்கையையும் தாக்கவில்லை. அவன் மதிப்பையும் சற்றும் குறைக்கவில்லை. ஏனெனில் அவனது உலகியல் திறம், கண்டிப்பு, உழைப்பு, சிக்கனம் ஆகியவற்றின் பயனாக அவன் செல்வமும் ஆற்றலும் வளர்ந்துகொண்டுதான் வந்தன. ஆனால் இக்கோட்பாட்டை அவன் தன் குடும்ப வாழ்வில் காட்டியதும் அதனால் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன.

கோமான் மனைவி இளமையிலேயே இறந்துவிட்டாள். இக்குறுகிய மண வாழ்க்கை அனுபவத்திற்குள் அவ்வாழ்வு வெறுத்துப் போய்விட்டதால் அவன் பின் மணம் செய்து கொள்ளவில்லை. எனவே இயற்கையாக அவன் குடும்பத் தொல்லை யற்றவனாகவே இருந்தான். ஆயினும் அவனுக்கு நீலா என்ற கைம்பெண்ணான ஒரு உடன் பிறந்தாளும், கோகிலா என்ற மருமகளும் இருந்தனர். ஆதரவற்று, ஏழ்மை நிலையிலிருந்த அவர்களைச் செல்வ நிலையில் இருந்த அவன் தன்னுடன் வைத்து ஆதரித்தான்.

கோமான் உள்ளூர அன்புகனிந்த உள்ளமுடையவனா யினும், குடும்ப வாழ்விலும் தன் கண்டிப்பான கொள்கையைக் கையாள வேண்டுமென்னும் உறுதியுடையவனாயிருந்ததனால் மேல் போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவன் கல்நெஞ்சனாகக் காணப்பட்டான். அவன் தங்கையும் தங்கை மகளும் எல்லா ரையும்போல் பகட்டான வாழ்வு, வெளிப்படையான இன்ப நுகர்ச்சி ஆகியவற்றில் பற்றுடையவர்களா யிருந்தனர். ஆனால் அவனோ எளிய வாழ்க்கை, சிக்கனம், பழமைப்பற்று ஆகிய வற்றை உறுதியான வாழ்க்கை விதியாகக் கொண்டிருந்தான்.