9. நம்விதி நம் கையிலே
துரைசாமி என்பவன் இராமாபுரத்தில் ஒரு செல்வன். அவனுக்குப் பல காணி நிலங்கள் இருந்தன. தன் மனைவி இறந்தபின் அவன் தன் இருபுதல்வியர்களை வளர்த்து அவர்க ளிருவருக்குமே தன் உடைமைகளை எல்லாம் பகிர்ந்து வைத் தான். மூத்த புதல்வியாகிய உருக்குமணி அறியாச் சிறுபருவ மாகிய பதினொன்றாம் வயதிலேயே விசுவநாதன் என்பவனுக்கு மணமுடிக்கப் பெற்றாள். இளையவளான இலட்சுமி சிறு குழந்தையாயிருந்தாள். தந்தையிறந்தபின் இருபுதல்வியர்கள் செல்வத்தையும் மேற்பார்க்கும் பொறுப்பு விசுவநாதனுக்கே ஏற்பட்டது.
கணவன்
உருக்கு விசுவநாதனை மணக்கும்போது என்றால் என்ன என்பதையே அறியாதவளாயிருந்தபடியால் விசுவநாதனை அவள் தன் தாய் தந்தையர் விருப்பப்படியே மணக்க நேர்ந்தது. ஆனால் தாய்தந்தையர் போயும் போயும் அவனைத் தேர்ந் தெடுத்ததற்குக்கூட காரணம் காண்பது அரிது. அவனிடம் பெண்கள் விரும்பும் அழகும் குணமும் நாகரிகமும் அறிவும் எள்ளத்தனை கூட இல்லை. ஆண்கள் விரும்பும் செல்வமும் இல்லை. அவனுக்குத்தகுதி உண்டானால் அது இரண்டே இரண்டுதான். ஒன்று அவன் தன் குடும்பச் செல்வ முழுவதையும் வழக்காடி இழந்தவன். 'ஆயிரம்' பேரைக் கொன்றவன் அரைமருத்துவன் என்ற நியாயப்படி இத் தோல்விகளாலேயே அவன் வழக்கு மன்றப் பழக்கமும் திறமையும் மிகுதியுடையவன் என்று உருக்குவின் தந்தை எண்ணியிருக்கக்கூடும். மேலும் ஆண்மகவில்லாத உருக்குவின் குடும்பத்திற்கு அவன் ஆண்மகவாய் வந்திருக்கத் தகுந்தவன். தனக்கென வீடும் செல்வமும் இல்லாததால் அவன் மாமன் இருக்கும்போதே மாமனார் வீட்டுப் பிள்ளையாய் இருந்து வந்தான்.