உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. மெல்லியல் மூவர்

நவம்பர் மாதத்தில் ஒருநாள். பிற்பகல் நேரம். வானத்தில் வெங்கதிர் மறைந்துவிட்டது. கீழ்வானில் தண்கதிர் எழுந்து விட்டாலும், வானத்தின் வெள்ளொளியில் அதன் ஒளி மழுங்கி யுள்ளது. வானத்தின் பகலொளியைச் சட்டை பண்ணாமல் நிலப்பரப்பில் அரையிருள் ஆட்சி தொடங்கிவிட்டது. கருங்கும்மென்று கரிசல் பரப்பு கடல்போல் பரந்து கிடக்கின்றது. வானத்தின் வெள்ளொளிச் செல்வனும் நிலத்தின் காரிருட் செல்வியும் தம் இருவேறு வண்ணங்களின் கவர்ச்சிகாட்டி வானவிளிம்பில் கைகோத்து மௌனமான மறைகாதலில் அயர்ந்துள்ளனர்.

புதர்க்காட்டின் பரப்பைக் கிழித்துக்கொண்டு வெள்ளிய நூலிழைபோல் ஒரு பாதை செல்கிறது. அதன் வழியாகச் சற்று வழிதடவிச் செல்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் எத்தனையோ புது மாறுதல்களுக்கிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் ஸீஸர் கண்ட அதே பிரிட்டனின் தோற்றத்தையும் அதே வாழ்க்கைப் பண்பையும் பேரளவு மாறாது வைத்து நினைவூட்டும் இப்புதர்க்காட்டின் சின்னமென்று அவ்வுருவைக் கூறலாம். ஏனெனில் அது ஒரு கிழவன் உருவம். ஆயினும் அவன் நடையும் அவன் முணுமுணுத்துப் பாடிய பாட்டும் நெடுநாளைக்குமுன் அவன் வாழ்ந்த வாழ்வின் இளமையையும் முறுக்கையும் உள்ளக் கிளர்ச்சியையும், இன்னும் நினைவூட்டின.

கிழவனுக்கு முன்னே சற்றுத் தூரத்தில் கருமணலில் ஊரும் நண்டுபோல ஏதோ ஒன்று தெரிந்தது. கிழவன் அதை அணுகுந்தோறும் அது ஒரு மூடு வண்டியென்றும் அதன் அருகே செவ்வுடையணிந்த ஒரு மனிதன் நடந்து சென்றானென்றும் விளங்கிற்று. அவன் உடையின் செந்நிறம் முகத்திலும்