தாயகத்தின் அழைப்பு
29
கூத்தில் சார்லி என்ற இளைஞன் துருக்கி அரசன் பகுதியை நடித்தான். சார்லி உள்ளுற யூஸ்டேஷியாவை அழகுத் தெய்வமாகத் தொலைவில் நின்று பூசித்தவன். ஆகவே அவள் எளிதில் அவனை அணுகிப் பேச்சுக் கொடுத்தாள். கிறிஸ்மஸ் அன்று அவன் பகுதியை அவனிடமிருந்து தான் நடிக்கும்படி அவள் அவனைத் தூண்டினாள். அரைமணிநேரம் தன் அழகுத் தெய்வத்தின் கையைப் பற்றிக்கொண்டிருக்கும் விசித்திரக்கூலி பெற்று அவன் இணங்கினான். யூஷ்டேஷியா அவன் பகுதியை அவனிடம் கேட்டு நடிக்கப் பயின்று வைத்துக்கொண்டாள். கிறிஸ்துமஸுக்கு முன்னாள் அவனிடமிருந்து ஆடை பெற்றுச் சென்று நடித்தும் விட்டாள்.
சார்லியின் பகுதிக்குச் சார்லி உடல்நல மில்லாமையால் புதியவன் ஒருவன் நடித்தான் என்று கூறப்பட்டது. அது யார் என்று அறிய அவாக் கொண்டனர் சிலர். அச்சிலருள் அது செல்வி வை என்று அறிந்தவர் ஒருவர் இருவர்தான். ஆனால் அவள் நடிக்கும்போதும் பாடும்போதும் கிளிம்பை அவள் பார்க்க முடியவில்லை. அவன் தன்னைப் பார்த்தானா, என்ன நினைத்தான் என்று அறிய முடியவில்லை. தான் ஆணுடையில் வந்ததால், தன்னை அறிந்து பேசவோ, பிற பெண்களுடன் பழகி ஆடலிற் கலப்பதுபோல் தன்னுடன் கலக்கவோ முடியாமற் போனதுபற்றி அவள் வருந்தினாள். ஆயினும் போகுமுன் கிளிம்மை அவள் பார்க்கமுடிந்தது. அவன் தன்னை ஆணல்லாத பெண்தான் என்று ஊகித்துக் கொண்டதாக அவள் அறிந்தாள். ஆனால் அவன் தன்னை அறிந்தானோ இல்லையோ, என்று அவள் உறுதிகூற முடியாமலிருந்தது. ஆனால் அவனுடன் அருகேயிருந்து பேசிவிட்ட மகிழ்ச்சி அவள் நாடி நரம்புகள் தோறும் கூத்தாடிற்று.
முன்பு வில்டீவ் நேசத்தை விட்டுவிடும்படி டிக்கரி வென் யூஸ்டேஷியாவிடம் கூறவந்தபோது அவள் அதற்கு முற்றிலும் இணங்காமல் அனுப்பியிருந்தாள். ஆனால் இப்போது அவள் உள்ளத்தின் மாறுதல் நிலைமையையும் மாற்றிவிட்டது. அவள் இப்போது வில்டீவிடமிருந்து தாம்ஸினை விலக்க விரும்ப வில்லை. தன் ஆர்வலனிடமிருந்து தாம்ஸினை விலக்கும்படியும் அவளை வில்டீவுடன் சேர்த்து வைக்கவுமே விரும்பினான்.