(100) ||___
அப்பாத்துரையம் - 29
இத்தகைய போலி நலங்களும் தீங்குகளுமேயாதலால், துறப்பவன் இழப்பது உண்மையில் எதுவும் இல்லை. பெறுவதோ ஈடற்ற செல்வம். ஆயினும் துறப்பவர் பார்வையில் முதலிலே பெறுவது பெரிதாகத் தோற்றாது; இழப்பதே, துறப்பதே பெரிதாகத் தெரிய முடியும்.அவர்கள் கடந்து செல்ல, தாண்ட இருக்கும் தன்னலத் தளத்தின் இயல்பு அது. அத்தளத்தின் தன்னல மயக்கம், ஆன்மீக இருள் நீக்க இருக்கும் தீங்குகளை நலங்களாகக் காட்டி மருட்சியூட்டும். அந்நீக்கத்திற்குரிய துன்பமே முதலில் இன்னாததுபோலத் தோன்றிப் பின் இனிமைக்கு வழிகாட்டுவது ஆகும். தீமை நீக்கத்தின் போது, துன்பத்தின்போது, அகத்தே தன்னலத்தின் ஒரு பகுதியும் நீங்கிப் பொதுநல ஆர்வத்துக்கு வழி வகுக்கிறது.
வேண்டாமை விழுச் செல்வம்
குடியின் வெறிக்கு உதவி செய்து வெறியை வளர்க்கும் குடிவகைகளை நீக்கும்போது ஒருவன் அடையும் துன்பம் சிறிதன்று. ஆனால் அவன் நீக்குவது குடிவகைகளையல்ல, அவற்றை விரும்பும் விருப்பத்தை - அவ்விருப்பத்தை வளர்க்கும் ஏக்கத்தையே! அந்த நாட்டம் நீக்கிவிட்டால், அவன் பெறும் அமைதி குடிவகையின் இழப்பல்ல, அது வேண்டாத நிறைவு. அதன் ஏக்கம், நாட்டம் அவனை விட்டகன்றது. அதனுடன் வெறியும் வெறி பெருக்கும் கருவியின் தேவையும் உடனழிந்தன. இழந்தது கைக்காப்பையல்ல, விலங்கை; அந்த விலங்கைக் கைக்காப்பென்று மயங்கும் மயக்கத்தை; அம்மயக்கத்தால் ஏற்படும் ஏக்கத்தை - அத்தனையையுமே! இந்த இழப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அகப்பேறு, அவற்றின் பயனாக வரும் அமைதி, அவற்றின் மணிமகுடமான அரும்பேறு!
வேண்டாமையை விழுச் செல்வம், செல்வத்துட் செல்வம் என அறவோரும் அறிஞரும் போற்றுவதன் காரணம் இதுவே.
துறப்பதால்தான் பெறமுடியும் என்பதை அறியாத மயக்கம் உலகெங்கும் பரந்துள்ளது. துறவு என்ற சொல்லும், அதனை மக்கள் பொதுவாக வாழ்க்கை சாராத, வாழ்க்கை துறந்த எதிர்செயல் என்று கருதும் கருத்தும் இதற்குச் சான்றுகளாவன. துறவு துன்பந் தருவதென்று கருதி மக்கள் அதை வெறுக் கின்றனர்; விலக்குகின்றனர். துறவை அவர்கள் அருஞ்செயல்