அப்பாத்துரையம் - 29
(138) || மேலெழுந்த ஒரு பகுதியாக, தன் அறியாமைப் பருவ வாழ்நாளின் ஒரு நிழலாக அதை நோக்குகிறான்.
பழிகாரன் பழியில் அவன் தன் பழி காண்கிறான். அவன் துன்பத்தைத் தன் துயராகக் கொள்கிறான். பழியும் துன்பமும் கடந்து தான் அடைந்த அமைதியை அவனும் அடைவான் என்று நம்புகிறான், அடையும் நாளை எதிர்நோக்கி, அவ்வழி அவனைத் திருப்ப முயல்கிறான். இதுவே அவன் காட்டும் ஒத்துணர்வு.
போலித் தன்மை கடந்த மெய்யான நற்பண்பாளன், மெய் யுணர்வாளன் எத்தகைய ஒருதலைச் சார்பும் அற்றவன். அவன் ஒத்துணர்வு, ஆதரவு ஒரு திசையில் இல்லை, இரு திசையி லில்லை - எல்லாத் திசைகளிலும் ஒருங்கே பரவியுள்ளன. பிறர் பழிக்குமிடங்களிலும், கண்டிக்கும் இடங்களிலும், எதிர்க்கும் இடங்களிலும் அவன் பழியோ, கண்டனமோ, எதிர்ப்போ கொள்ள எண்ணுவதில்லை. அவன் வருந்துவதெல்லாம் ஒரே ஒரு செய்திக்குத்தான் - பழிகாரன் பழியை இன்பமென்று அணைக்கிறானே, அதனால் துன்பத்தை வரவழைத்துக்கொள்கி றானே என்று மட்டுமே அவன் கவலைப்படுகிறான்.
ஒத்துணர்வின் அளவே இன்பம்
ஒருவன் ஒத்துணர்வின் அளவு அவன் மெய்யுணர்வின் அளவு. அது கடந்து ஒத்துணர்வு செல்வதில்லை. அதே சமயம் அவன் எந்த அளவு மனக்கனிவும் பரிவிரக்கமும் உடையவனோ, அந்த அளவே அவன் மெய்யுணர்வு பெற முடியும். எனவே குறுகிய உணர்வுடையவர்களிடம் ஒத்துணர்வின் பரப்பும் மிகக் குறுகியதே. அஃது அவர்கள் வாழ்வில் துன்ப இருளும் கசப்பும் உண்டு பண்ணாமலிராது. ஒத்துணர்வு பெரிதாகுந்தோறும் ஒருவனுக்கு உள்ளம் அகற்சியுடையதாகும். மகிழ்ச்சி பெருகும். அவன் தானே பேரின்ப ஒளிகண்டு பிறருக்கும் அதைத் தெள்ளத் தெளியக் காட்டும் ஆற்றல் பெறுகிறான்.
மற்றவர்களைத் தன் ஒத்துணர்விலிருந்து ஒருவன் தடை செய்து இதயத்தின் வாயிலை அடைக்குந்தோறும் பேரின்பம், அமைதி, வாய்மை ஆகியவற்றின் வாயிலும் அவனுக்கு அடைக்கப்பட்டு விடுகிறது. ஒத்துணர்வு முடியும் இடம், இருளும் துன்பமும் ஆரிடரும் தொடங்கும் இடம். இதனாலேயே தம்மை