உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(232

அப்பாத்துரையம் - 29

மிகப் பெரிய உலக ஆசான்களெல்லாம் முனைத்த மோனநிலை மூலமே மிகச் சிறந்த முறையில் படிப்பினைகளை வலியுறுத்திச் சென்றுள்ளனர். அவர்கள் மோனநிலையை ஒருவேளை அவர்கள் மாணாக்கர்களுள் ஒன்றிரண்டுபேரே முற்றிலும் புரிந்து கொண்டிருக்கக்கூடும். ஆயினும் அவர்கள் மூலமே அது ஊழிகடந்து நமக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோனத்தின் இக்காலங் கடந்த பண்பு, மதிப்பு மிகுந்த வாய்த்திற மிக்கவர் பேச்சுக்களுக்குக்கூட இல்லாதது. வாய்த்திற மிக்கவர் சொற்களை ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கக்கூடும், உடனடியாக மக்களிடையே அவை கிளர்ச்சி யூட்டக்கூடும், ஆனால் ஒரு சில நாட்களில் அல்லது ஆண்டு களில் - உச்ச அளவில், ஒரு சில தலைமுறைகளுக்குள் - அது மறக்கப்பட்டே போய்விடும். ஆனால் இயேசுபிரான், புத்தர் பெருமான் ஆகியவர்களின் அறிவார்ந்த சொற்களல்ல அறிவார்ந்த மோனமே பல்லூழி கடந்து நமக்குப் பதிவு செய்யப் பட்டு நிலவரமான மெய்ம்மைகளாகக் காட்டப்பட்டுள்ளது. இயேசு, புத்தர் பொருள் நிறை மோனம்

"உண்மை யென்றால் என்ன?" என்று பைலட் என்பான் இயேசு பெருமானை நோக்கிக் கேட்டபோது, அவர் மறுமொழி ஆழ்ந்த நிறைமோனமன்றி வேறெதுவுமில்லை. ஆனால் அம்மோனமே கேள்வி கேட்பவன் இறுமாப்புக்கு ஒரு தகுதி வாய்ந்த மறுப்பாகவும், இயேசுவின் தற்பணிவுக்கு ஓர் அரும் பெருஞ் சான்றாகவும் அமைந்தது. அறிவாழமற்றவர்கள் புன்மை வாய்ந்த கேள்விகளுக்கெல்லாம் அஃது ஊழூழிகாலம் மறு மொழி கூறிக் கொண்டேயிருக்கிறது. 'தேவர்கள் அடியெடுத்து வைக்க அஞ்சுமிடங்களிலே மூடர்கள் அஞ்சாது அடிவைத்துச் செல்வர்' என்ற பழமொழிக்கு அஃது ஓர் இலக்கியமாக உள்ளது.

மெய்யுணர்வாளருக்கு உலகம் கூறுபடுத்த முடியாத ஒரு முழுமை. அதை அவர்கள் அறிவிலிகளைப்போலக் கூறுபடுத்தி அளக்க முனைந்துவிட மாட்டார்கள். அதுபோலவே இயற்கை யின் அடிமுடியற்ற ஆழ்ந்த அடிப்படை உண்மையையும் அவர்கள் மிக எளிதாக ஒரு கோட்பாட்டுக் கட்டுக்குள் அல்லது வேதாந்த வாய்ப்பாட்டுக்குள் அடக்க அஞ்சுவர். மூடரோ இதையே தருக்குடன், ஆரவாரத்துடன் செய்வர்!