250
அப்பாத்துரையம் - 29
சடங்காசாரப் பக்தி மிகவும் கீழ்த்தரப்பக்தியேயானாலும், அதுகூட அமைதி, ஒருமுகப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் இழிந்த அவாக்களில் உழல்பவர்களை ஒருபடி உயர்த்த உதவுகிறது என்னல் வேண்டும். அதன் நீடித்த பயிற்சிக்குப்பின் அக அமைதி, மோனம், சிந்தனை ஆகிய படிகளில் அவர்கள் முன்னிலும் எளிதாக ஏறிச் செல்ல முடியும்.
தனிமையும் ஓய்வும் அக இன்பத்தின் தொலை ஒளிகள், அகக் குரல்கள்
தன் உள்ளத்தை அடக்க முடியாமல், இடையிடையே யாவது அமைதியும் தனிமையும் பெற்றுத் தற்பயிற்சியிலீடுபட வழியில்லாது அல்லது வழி தெரியாமல் உழல்பவர்கள்கூட இன்னதென்றறியா வகையில் ஓர் உயர் இன்ப ஆர்வம் கொள்ளக் கூடும். உண்மையில் உலகின் பெரும்பாலான மக்கள் நிலை இதுவே. இத்தகையவர்கட்காகவே மனித நாகரிகத் தொடக்கத்தில் சமயவாழ்வு கால் கொண்டது. இத்தகைய வர்களுக்காகவே இன்னும் சமயம் வாழ்வு பெறுகிறது. உலக ஆசாரியர்களின் உச்ச உயர் வாழ்வுக் குறிக்கோளைச் சென்று எட்டமுடியாத சமயவாதிகள், இன்னும் அவ் உலக ஆசாரியர் களின் பெயர் கூறிக் கொண்டே சமயவாழ்வைச் சடங்காசார நிலையில் வைத்துப் பேணியே வெற்றி கண்டு வருவதும் இதனாலேயே.
தவறான தன்னல, ஆரவாரப் பாதைகளில் செல்லாதவரை, சமயவாதிகளும், சமயப்பணி மக்களான குருமாரும் இந் நிலையில் நின்றே மக்களின் இன்றியமையாத் தேவை ஒன்றை நிறைவேற்றுபவராகவும், அது காரணமாக மக்களால் பேணிப் போற்றப்படுபவராகவும் நிலவுதல் இயல்பே.
வாழ்க்கையின் மாயமருட்சிகள், சிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல்களையும் அவற்றை வெல்லுவதற்குரிய அறிவையும், வென்று மேல் சென்று உயர்நிலை அடைதற்குரிய மெய்யுணர்வையும் மனிதன் தனிமை மூலமே பெறுகிறான்.
ஒரு கட்டடத்தின் வலுவும் நீடித்த உறுதியும் அதன் கடைகாலின் ஆழத்தையும் வலுவையுமே பொறுத்தன. ஆயினும் கட்டடத்தைக் காண்பவர் எவரும் அந்தக் கடைகாலைப் பார்க்க