பேரின்பச் சோலை
249
வேலை செய்தலுத்த உடலுக்கு ஓய்வு, துயில் அவசியம். அது இல்லாவிட்டால் அலுப்பால் நேர்ந்த தேய்வு சரி செய்யப் படாமல் உடலுக்கு அழிவு நேரும். அதுபோல அமைதி அல்லது மோனமும், தனிமையும் உயிர்நிலைக்கு அவசியமானவை. அவை இல்லாவிடில் இன்ப ஆற்றல் அழிந்துபட நேரும்.
அழியும் பொருள்களிடையே புலன்களைச் செலுத்தி வாழ்பவன் இடையிடையே யாயினும் தனிமையும் மோனமும் பேணாவிட்டால்- அழியா அக இன்பத்தின் உயிரொளியின் கூறு பெறாவிட்டால் - அவன் புறவாழ்வுகூட, ஐம்புல நுகர்வின்பம் கூட நீடித்து நடைபெற மாட்டாது. உலகின் எல்லாச் சமயங்களும் தனிமையை வலியுறுத்துவது இதனாலேயே.
எல்லாச் சமயங்களிலும் சமயவாதிகள் எத்தனை தவறுகள் செய்தாலும், சமயங்களின் பெயராலும் கடவுளின் பெயராலும் எத்தனை அட்டூழியங்கள் புரிந்தாலும், இயற்கை யுணர்ச்சி காரணமாக மக்கள் என்றும் சமயத்தில் ஈடுபட்டிருப்பதன் காரணமும் இதுவே.
சமயவாழ்வின் சடங்காசாரங்கள் சமயவாதிகளிடையே
அறிஞரால் கண்டிக்கப்படுபவை. ஏனெனில் அவை அகப் பண்பிலிருந்து புறப்பொருள்களுக்கு மக்கள் கவனத்தை இட்டுச் செல்பவை. ஆயினும் அவற்றில் இயல்பான ஒரு நலன் உண்டு. மக்கள் அதில் இயல்பாக ஈடுபடுவதும் இதனாலேயே. அவை புறப்பொருள்கள்மீது சென்றாலும், அவாவழிச் செல்வதில்லை. ஆகவே அவா வழிச் சென்று அலைக்கழியும் உள்ளங்களுக்கு அச்சடங்கு நேரம் ஓய்வாகப் பயன்படுகிறது.
பொருளற்ற சடங்குகள் என்று அறிஞர் அவற்றைக் குறை கூறுகின்றனர். ஆனால் அவற்றின் சிறப்பும் இக்கூற்றிலேயே அடங்கியிருக்கிறது. அவை நற்பொருளற்றவை, தீயபொருளும் அற்றவை - அஃதாவது போலி இன்பங்களுடன் தொடர்புடைய எப்பொருளும் அவற்றில் கிடையாது. இந்நிலையில் அவை அவாவழி அலையும் உள்ளத்துக்கு ஓய்வு தர முடிகிறது. காலா காலத்தில் இச்சடங்குகளில் ஈடுபடுபவர், அந்நேரங்களிலேனும் அச்செயலில் ஒருமுகப்பட்டு ஈடுபாடு காட்டுகின்றனர். பன்முகப்பட்டுப் பரவி அலைக்கழியும் உள்ளத்துக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகவும் நல்ல ஓய்வாகவும் பயன்படுகிறது.