பேரின்பச் சோலை
(271
உன் உளச்சான்றை நீ பின்பற்ற வேண்டுமானால், அதற்குத் தங்குதடையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் உன் உள்ளம் தெளிவாயில்லாவிட்டால், பொறாமை, பேரவா, தற்பற்றுச் சார்ந்த அவா ஆகியவற்றிலிருந்து நீ விடுபட்டிரா விட்டால், உளச்சான்று சுதந்தரமாக இயங்காது. ஏனெனில் உள்ளத்தில் அறிவு உலவியபின் அந்த அறிவின் இயக்கமாகிய சிந்தனையின் விளைவே மனச்சான்று. மனத்தெளிவு உளச் சான்றைத் தோற்றுவித்து, அதன் நலம் பேணி வளர்ப்பது மட்டுமல்ல, அதன் அறிவுரையைப் பின்பற்றும் ஆற்றலும் தருவது. ஆகவே எப்பாடுபட்டும் மனத்தெளிவும் உளச்சான்றின் உறுதியும் பெற்றாக வேண்டும்.
தன் முனைப்பு வேறு, துணிவாற்றல் வேறு
உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தித் தெளிவு உண்டு பண்ணும் வகையில், உட்பகைகளைத் தாக்கி எதிர்த்து வெல்லும் வகையில், உனக்கு உதவும் பண்பு துணிவாற்றல். ஆனால் அப்பகைகளையே பெருக்கிவிடுவது தன் முனைப்பு. தன் முனைப்புக்கும் துணிவாற்றலுக்கும் உள்ள வேறுபாடு திசை வேறுபாடு. தன் முனைப்புப் புறமுகமாக வேலை செய்கிறது. ஏனெனில் அது தற்பற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துணிவாற்றல் பணிவின் மற்றொரு கிளை. அது தன் முனைப்பை அகமுகமாகச் செலுத்துகிறது. இத்துணிவாற்றலைத் தீய அகப்பகைப் பண்புகளுக்கெதிராகப் பயன்படுத்து. பயன்படுத்துந்தோறும் அதன் ஆற்றல் வளர்வதையும் உன் உறுதி பெரிதாவதையும் நீயே காண்பாய்.
உன் அறிவை விரிவுபடுத்து. அது உன் படைக்கலம். துணி வாற்றலுடன் அறிவு ஒத்துழைத்தால் உட்பகைகள் வேரறும். அவை ஒளித்தோடி ஒதுங்கிநிற்கும் இடமறிந்து அவற்றைத் துடைத்தழிக்க அஃது உனக்கு உதவும். உன் அறிவுக்கு உதவும் உள்ளொளி உன் உள்ளத்தில் உள்ளாழத்தில் சுடரிடுவது காண்பாய். அதுவே அன்பு. அதனை அணையாது, மங்காது, மறுகாதுபேணு. அதனைத் தூண்டிவிடு. அவா, உணர்ச்சி வெறிகள் என்னும் புயல்களிலிருந்து அதைத் தடுத்தாண்டு, அதன் உதவியால் அவற்றின் இருள்நீக்கு. அது உறுதியாக, நி
லையாக