அப்பாத்துரையம் - 29
270 || உன் அரசை நீ ஆண்டால், உலகை நீயே ஆளலாம்!
புறமெல்லாம் மாறுதல், அழிவு, உறுதிக்கேடு! அகமெலாம் மாறா உறுதி, அமைதி, பேரின்பம்! ஏனெனில் உள்ளத்தின் உயிர்நிலை முற்றிலும் தன் நிறைவுடையது. அங்கே தேவை எந்த அளவு பெரியதானாலும், அதன் அளவு வளநிறைவும் உண்டு. மனிதனுக்குரிய உலவா இன்பக்கோட்டை அது. அதனுள் நுழைந்த அன்றே அதை நீ வென்றுவிட்டாய். ஏனென்றால் நீ அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும் அது உன்னுடையது, உனக்குரியது, உனக்காகவே காத்துக்கிடப்பது.
நீ அதன் அரசன், அதன் கோமான். மற்ற இடங்களி லெல்லாம் நீ அடிமையாயிருக்க வேண்டும். பிறர் தயவு எதிர் பார்த்து வாழ வேண்டும். இங்கே நீ மன்னன். உன் சொற்கள் ஆணைகள். உன் விருப்பங்களே சட்டங்கள். உன் அறிவே திட்டங்கள். அது உன் அரச செல்வம், பிற அரசுகளைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அவற்றில் நீ தலையிட வேண்டாம். அவற்றை அவற்றுக்குரியவரிடம் விட்டுவிடு.
உன் முழுப்பொறுப்பு, உன் சிறு அரசில். அதிலிருந்து கொண்டே, அதைச் சரிவரப் பயன்படுத்திக்கொண்டே நீ உலகை அரசாளலாம். ஏனெனில் அரசுகளின் பெருமை சிறுமை அவற்றின் எல்லையில், அளவில் இல்லை. அவற்றின் அக அமைதியில், கட்டுப்பாட்டில், உறுதியிலேயே அமைந்துள்ளது. அத்துடன் உலகு ஒன்று. உன் உலகின் மையம், உனக்குரிய உன் அரசு. அந்த அரசை நீ இயக்கியபின், உலகும் அதன்வழி கட்டாயம் இயங்கும்.
உன் அரசில் உனக்கு ஓர் அமைச்சனுண்டு, அதுவே உன் உளச்சான்று. அதன் சுதந்திரத்தில் குறுக்கிடாதே, அதன் அறிவுரைப்படி நட. உன் அரசாட்சி நல்லரசாட்சியாய் இருக்கும். அதன் உறுதி, உன் வாழ்வில் உறுதிதரும். உன் சூழலில் உன் உலகில் அது உனக்கு வளமும் வளர்ச்சியும் தரும். உன் உலகின் எல்லை, சூழலின் எல்லை, உலகின் எல்லையாக, இயற்கையின் எல்லையாக வளரும். உன் நலத்துக்கும், உலகின் நலத்துக்கும் நீ செய்ய வேண்டும் ஒரே கடமை, உன் அரசின் நல்லாட்சியே.