பேரின்பச் சோலை
269
யிழந்து, துன்பங்களைப் பெருக்கிக்கொண்டே போவான். ஆனால் புறப்பொருள்கள் எதிலும் இன்பத்தை நாடாமல், அதன் பெருவெள்ளத்தைத் தன்னுள்ளே நாடித் தற்சார்புடனும் தன்னிறைவுடனும் வாழ்பவன் என்றும் இடருக்கும் இன்னா மைக்கும் ஆட்பட
மாட்டான்.
ய
பிறரைச் சார்ந்து வாழ எண்ணுபவர்கள், பிறர் செயல்கள் மூலமே தாம் இன்பமடைய முடியும் என்று நம்புகிறார்கள். நம் இன்பம் நம் செயல் சார்ந்ததன்று கருதத் தவறிவிடுகிறார்கள். பிறர் தம்முடன் ஒத்துழைத்தால்தான் தமக்கு அமைதி கிட்டு மென்று அவர்கள் எண்ணுகிறார்கள். தாமே தம் உள்ளுணர் வொளியுடன் ஒத்துழைத்தால்தான் அமைதிகிட்டும் என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள். இத்தகையவர்கள் ஆன்மிக வாழ்வில் காலூன்ற இடமின்றி மிதந்து தத்தளிக்கிறார்கள். கணத்துக்குக் கணம் தம்மைச் சுற்றிலும் மாறுபடும் சூழல் களிடையே ஒன்றும் தோன்றாமல் திகைத்துத் திணறுகிறார்கள். இன்பம், துன்பம் ஆகிய இரண்டினும் மோசமான நிலை அவர்களது இன்பத் தோற்றத்தினூடாகத் துன்பம், துன்பத் தோற்றத்தினூடாகப் பெருந்துன்பம் என்ற ஓய்வொழிவில்லா மேடுபள்ளங்களில் புரண்டு உருண்ட அவர்கள் நிலைதடுமாறு கிறார்கள். அமைதியும் சரிசமநிலையும் இழந்து குப்புறக் கவிழ்ந்து கரணமிட்டுச் சுழலும் அவர்கள் ஆன்மிக வாழ்வு புயலில்பட்ட பயின் கருவி (சுக்கான்) இழந்த படகின் நிலை யாகிறது.
-
தானே தட்டுத்தடவித் தடுமாறியன்றி ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதில்லை. அது நிற்கக் கற்றுக் கொள்வதும் அவ்வாறே. வாழ்வில் தனிமனிதன் நிலைமை இதற்கு மாறு பட்டதன்று. அவன் தானே தன்னம்பிக்கையுடன் தன்னைச் சார்ந்து நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தானே சிந்திக்க, தானே சிந்தித்து முடிவு செய்ய, எதையும் மதிப்பிட்டுணரக் கற்றுக் கொள்ளல் வேண்டும். இவற்றின் பயனாக, தானே எதுவும் தேர்ந்தெடுக்க, செயல் செய்யப் பழகியாக வேண்டும். தன் உள்ளத்தின் வலிமை கொண்டு தானே முயன்று தேர்ந்தெடுத்த வழியன்றி, வேறு எத்தகைய வழியும் அவனைப் பேரின்பச் சோலையின் திசையில் திருப்பாது.