உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

21

இடையறாது வளர்ந்து வரும் பொங்கற் பேரின்பத்துக்கு இட்டுச் செல்லும் இன்னிலவுப் பாதையாக மிளிரும்.

உன் நற்றொடக்கம் நல்விளைவுகளைத் தருவதுடன் மேன் மேலும் நற்றொடக்கங்களைப் பெருக்கும். உன்னைச் சூழ உள்ள வர்கள் உள்ளத்திலும் அது நற்றொடக்கச் சிந்தனையலைகளைப் பரப்பும். இவை உன் வாழ்விலும் உன் சூழலிலும் பேரின்ப அமைதியை உலவவிடும்.

தீய கருத்துக்கள் பிறப்பில் துயர் தருபவை. வளர்ச்சியிலும் வேதனை உண்டு பண்ணுபவை. அவற்றின் விளைவுகளும் துன்ப மயமாகவே இருக்கும். இவற்றினுக்கெதிராக, நேரிய கருத்துக்கள் பிறப்பில் இன்பம் வழங்கும். வளர்ச்சியில் பேரின்பம் பரப்பும். அவற்றின் பயனும் நீடித்த இன்பமாகவே அமையும்.

மெய்யறிவை நாடும் ஒருவன் கண்டு பின் மேற்கொள்ள வேண்டிய நற்றொடக்கங்கள் இம் மூன்று மட்டுமல்ல, இன்னும் பல உண்டு. ஆயினும் அவற்றில் முதலாவதும் கடைசியாவதும், மிக முக்கியமானதும், மற்ற எல்லாவற்றையும் தன்னகத் தடக்கி யதும் ஒன்றே - உளத்தின் சிந்தனைகளில் நற்றொடக்கம் காண வேண்டும் என்பதே! நிலையான பேரின்பத்தின் தலையூற்றும் உயிர்முதலும் இதுவே. ஆனால் இந்த ஒன்று நிறைவேற, நாம் வளர்க்க வேண்டும் பண்புகள் பல. தன்னடக்கம், தன்னுறுதி, தற்கட்டுப்பாடு, வலிமை, தூய்மை, அன்புக்கனிவு, தொலை நோக்கு, முழுதுணர் ஆற்றல் ஆகியவை அதற்குத் தேவை. இவற்றைத் தமதாக்கியவர்கள் வாழ்வில் முழுநிறைவு அடை வார்கள். சிந்தனையில் முழுநிறைவாற்றல் பெறுவார்கள். இந்நிறை சிந்தனை எல்லாத் துயர்களையும் போக்கடிக்கும். ஒவ்வொரு கணத்தையும் அமைதியுடையதாக்கும். அதனை உடையவன் வாழ்நாள்கள் யாவும் இன்ப நிறைவுடையன ஆகும். உலப்பிலா நிலவரப் பேரின்பம் அவனைச் சுற்றி உலவும்.

அடிக்குறிப்புகள்

1. “All common things. each days's events,

That with the hour begin and end; Our pleasures and our discontents Are rounds by which we may ascend.