உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 29

வருங்காலமும் - குறுகிய ஒருகணப் போதாகிய நிகழ்காலத்தில் செறிவுற்று வலிமையுறுகின்றன. எனவே இந்நிகழ்கால வினையில் தன்னைத் தங்குதடையின்றி முற்றிலும் ஈடுபடுத்தி உழைப்பவன், உழைத்து அவ்வினையை முழுநிறைவுடைய திருந்திய செய் வினையாக்குபவன் ஒருமுக ஆற்றலில் வளர்ந்து தன்னடக்கம், தன்னாக்கம், தன்னாட்சி ஆகிய பேறுகளில் முந்துகிறான். புற ஆற்றல்கள் படிப்படியாக அவன் அக ஆற்றல் ஆகின்றன. செயற்கையான, வலிந்த, மாயமந்திரப் பொறிகளால் எட்ட முடியாத நிலையான வல்லமை அவனுக்குக் கை வருகின்றது.

புறஆற்றல்கள் ஆற்றலைத் தூண்டும் கருவிகள் மட்டுமே. உண்மையான ஆற்றல் கூறுகள் யாவும் உன்னகமே உள்ளன. புறக்கருவிகளைப் பயன்படுத்தி நீ அவற்றுடன் இடையறாத் தொடர்புகொள்ள வேண்டியதொன்றே நீ மேற்கொள்ள வேண்டும் முயற்சி. இதை அறிவுடன் செய்வது எவ்வாறு என்பது மட்டுமே உன் திறமைக்குரியது. இது செய்யும்வரை, அக ஆற்றல்களைப் படிகளாகக் கொண்டு, மேன்மேல் உயர் தளங்களில் உனக்காகக் காத்துக் கிடக்கும் ஆற்றல்கள், இன்பங் களை நீ சென்றெட்ட முடியாது, உன்னுடையன ஆக்கிக்கொள்ள முடியாது.

காலத்தின் முட்டை, கணம்; பெருமையின் உயிர்க்கரு, சிறுமை

நிகழ்காலத்தின் நிகழ்கணத்தை உறுதியுடனும், அறிவுடனும் கடைப்பிடித்தொழுகுவதைப் போல உரமும் அறிவும் பெறும் வழி பிறிதில்லை. ஏனெனில் அந்த நிகழ்கணமே உனக்கு அக் கணத்துக்குரிய நிறைவினைக் காட்டும். ஒருகண எல்லையில் தோன்றுவதாகலின், இது பெரும்பாலும் சிறு வினையாகவே அமையும். முதல் நிகழ்கணத்தில் அதைக் கருதாது விட்ட பின்னரே அது கணந்தோறும் பெருவினையாக வளரும்; செயற் கருவினையாகவும் நம் கைப்பிடிவிட்டு மெல்ல மெல்ல நழுவத் தொடங்கும். ஆகவேதான் பெரியாரும் அறிவுக்குரியாரும் எப்போதும் சிறுவினையிலேயே, நிகழ்கணத்தின் நிகழ் வினையிலேயே கருத்து முற்றிலும் ஈடுபடுத்துவர். காலத்தின் முட்டையே கணம்; அதனுள் சிறுமையே பெருமையின் உயிர்க் கரு என்பதை அறிந்தவர்கள் அவர்கள்.