உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 29

தொலைநோக்குடைய மெய்யறிவு ஒளிவீC மிளிர்கிறது. ஒவ் வொன்றின் படிப்பினையும் இம்மெய்யறிவை வளர்க்கிறது, வாழ்க்கையின் நிறையின்பம் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

கடுமை, இடர், இன்னல் என்றால் என்ன? அவற்றின் உண்மை இயல்பு யாது? சூழலின் தன்மையறியாத சிக்கல் நிலை, முதிரா உள்ளத்தின் வலிமைக்கேடு என்பவையன்றி அவை வேறெதுவும் அல்ல. அச்சூழலின் தன்மையை, சிக்கலை முறுகப் பிடித்து அச்சிக்கலவிழ்க்கும் முயற்சியையே நாம் கடுமை, இன்னல், இடர் எனக் கருதுகிறோம். பெரும்பாலும் அவற்றின் இயல்பறியாது வெறுக்கிறோம். ஏனெனில் அவற்றின் மெய் யியல்பு கடுமை தருவதன்று, கடுமை நீக்குவது - சிக்கல் விடு விப்பது, எளிமையாக்குவது என்பதே. இதை அறிய வொட் டாமல், கடுமை, இன்னல், இடர் என்ற பெயர்களே நம் கண்ணை மறைக்கின்றன, விரும்பத்தக்க அவற்றை வெறுக்கத் தூண்டு கின்றன.

சொல் கடந்து, சொற்பொருள் கடந்து, அவற்றின் மெய்ப் பண்பு காண, ஆழ்ந்த உள்ளுணர்வும் தொலைநோக்கும் வேண்டும். ஆனால் இந்த உள்ளுணர்வையும் தொலை நோக்கையும்கூட அச்சிக்கல்களே தோற்றுவிக்கின்றன.

இடரின் நெருக்கடி உள்ளத்தில் வழக்கத்துக்கு மீறிய பரபரப்பையும் விரைவையும் உண்டுபண்ணுகிறது. இதனால் பொதுவாக, பொதுச் சூழ்நிலைகளில் செயல்படாமல் தூங்கிக் கிடக்கும் ஆற்றல்கள், தேங்கிச் சேமவைப்பாக ஒதுங்கிக் கிடக்கும் மறைதிறங்கள் வெளிப்படுகின்றன. அவை சிக்கல் அகற்றுகின்றன. சிக்கலின் மெய்யியல்பு காணும் வழியும் வகுக்கின்றன. தோல்வியை வெற்றியாக்குகின்றன. அந்த வெற்றியின் படிப் பினைகளை நிலையான வாழ்வின் அறிவுச் சேமகலமாக்குகின்றன.

கடுமை, இன்னல், இடர், சிக்கல்கள் இவ்வாறு உரு மாறிய, அவலப்போர்வை போர்த்த வாழ்வின் வழிகாட்டி களாக, நல்தெய்வங்களாக, ஆசிரியராக, நல்ல நண்பராகச் செயலாற்றுகின்றன. அவற்றின் குரல்களுக்குச் செவிசாய்ப்பவர் எல்லையற்ற நீளறிவும் இடையறா நீடின்பமும் பெறுவர்.