உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

81

படிப்படியாகவே மனிதன் தளைப்படுகிறான். தளை நீக்கும் போதும் இவ்வாறு மெள்ள மெள்ள, படிப்படியாகவே அவன் எளிதில் செயலாற்ற முடியும். அத்துடன் உள்ளத்தை ஆட்கொண்டுள்ள வெறி உணர்ச்சிகள் சிறிது சிறிதாக அகலுந்தோறும், மெய்யறிவு தானாகவே சிறிது சிறிதாக வளர்ந்து வரும். இதனால் விடுபடும் முயற்சி தொடங்கியவனுக்கு, முதற்படி முயற்சியினும் அடுத்தபடி முயற்சி எளிதாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு படியிலும் முந்திய படியில் பெற்ற மெய்யறிவு அவனுக்குத் துணை செய்கிறது.

இடுக்கண் வருங்கால், நகுக!

போலி இன்பங்களை நாடியவன் எந்தப் படியிலும் தன்னை அவற்றுக்குரிய உணர்ச்சிகளிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும். மெய்யறிவு அவனுக்கு இதில் உதவும். ஆனால், போதிய மெய்யறிவு பெறா நிலையில், போலி இன்பங்கள் துன்பந் தரும். எனினும் அறிவற்ற அந்நிலை கூடத் துன்பந் தந்து, அத் துன்பத்துடன் நின்றுவிடும். அது தானாகத் துன்பப் பயிர் வளர்ப்பதில்லை. அதை இன்பமாகக் கருதி மேலும் மடமை தொடர்ந்தால்தான் அதன் காரணகாரியத் தொடர்பான சங்கிலி பின் தொடரும். இந்நிலை எய்துமுன் நன்மை தீமை வேறுபா டறியும் மெய்யறிவு ஏற்படாவிட்டாலும், போலி இன்பத் தொடர் முழுவதும் பட்டாக வேண்டும். முக்கல் முனகலுடன் தொடங்கிக் கலுழ்தல், கதறல், ஏங்குதல், வீங்குதல் ஆகிய படிகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்து தீரும். மடமையினால் மேற்கொண்டு விட்ட இவற்றின் பொறுப்பறிந்து பொறுமை யுடன் இவற்றைத் தாண்டுவதொன்றே மீண்டும் இவற்றினின்று விடுபடுவதற்கும் அவற்றின் சுமையை எளிதாக்குவதற்கும் உள்ள வழியாகும்.

'இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.'

என்ற வாய்மொழியின் மெய்ம்மை இதுவே. நகை பொறுமை வருவிக்கிறது. பொறுமையில் அன்பும், அன்பில் அறிவும், இரண்டிலும் மெய்யுணர்வும் மெல்ல மலர்கின்றன.