உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 32

அவளுக்குத் துணிச்சல் தந்தது. அவள் தலைகுப்புற அதில் சென்று பாய்ந்தாள்.

நாற்புறமும் நீர்ச்சிலந்திகளின் கோர உருவங்கள் பேய்ச் சிரிப்புப் போன்ற கெக்கலிப்புடன் இழைகளை வீசின. பல்தலை நச்சுப் பாம்புகள் நாற்புறமும் இழைந்தன. ஆனால் அவளது பாய்ச்சலின் வேகத்தால் அவற்றின் பிடிவழுகிச் சென்றாள். அவள் புழைகடந்து ஆழ்கடல் நங்கையின் முன்சென்று விழுந்தாள்.

வேல்விழியின் வரவுகண்டு ஆழ்கடல் நங்கை மகிழ்ந்தாள். அவள் உடல் கடல்நங்கையின் உடல்போலவே இருந்தது. ஆனால் எந்தக்கடல் நங்கையையும்விட அவள் அழகும் உயரமும் மிக்கவளாயிருந்தாள். ஆறு கடல் நங்கையரின் வாழ்வுடன் அவர்கள் உயரமும் அழகும் புகுந்திருந்தன. அவளிடம் ஆறு நங்கையரின் வால்கள் அவள் உடலைச் சுற்றி நெளிந்தன. அவள் முகம் புன்னகை பூத்தது. வேல்விழியை எடுத்து அவள் ஆரத்தழுவினாள். “அழகிய சித்திரப் பாவையே! நீ நிலவுலக மங்கையாவதற்காகத் தானே வந்தாய்?" என்று கேட்டாள்.

“ஆம்” என்றாள் வேல்விழி,

"உன் வாலையும் வாழ்வையும் குரலையும் அதற்காகக் கொடுக்க விருப்பம்தானே?” என்றாள்.

வேல்விழி தலையசைத்தாள்.

ஆழ்கடல் நங்கையின் அருகே இரண்டு வாள்கள் இருந்தன. அவை மாயவாள்கள். இரண்டையும் அவள் தனது இருகையில் பற்றினாள். இரண்டும் எதிரெதிர் பாய்ந்தன, வேல்விழியின் வால் துண்டிக்கப் பட்டு, உடன்தானே ஆழ்கடலணங்கின் ஏழாவது வாலாய் ஒட்டிக் கொண்டது. வால் துண்டுபட்டதால் வேல்விழி துடித்தாள். ஆனால் ஆழ்கடலணங்கு இரு வாள்களையும் அதில் குத்தி நிறுத்தியபோது வேதனை இன்னும் பன்மடங்காயிற்று இளவரசன் எண்ணம் ஒன்றே இத்தனையையும் அவள் ஒருவாறு தாங்க உதவிற்று.

வாள்கள் அவளுக்கு வாள்களாகவே இருந்தன. ஆயினும் அவை கால்கள் போலவே ஒட்டி இயங்கின. பிறர் கண்களுக்கு