உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

||--

அப்பாத்துரையம் - 32

தடுக்கிற்று. பள்ளத்தில் விழுந்ததால், அவள் கால் புரண்டு முறிவுற்றது. வலி பொறுக்க மாட்டாமல், கூனி கதறி அழத் தொடங்கினாள்.

இளஞ்சாத்தன் சட்டென எழுந்து அவளுக்கு ஆதரவு தந்தான். விறகுக் கட்டையும் அவளையும் அவளது வீடு வரை தூக்கிச் சென்று உதவவும் முற்பட்டான். ஆனால் வழித்துணை வேலன் அவனைத் தடுத்தான். “அவளைத் தூக்கிச் செல்ல வேண்டுவதில்லை. நோவைக் குணப்படுத்த என்னால் முடியும் அதன்பின் அவளாக நடந்து சென்று விடுவாள்!” என்றான்.

"அப்படியே செய்யுங்கள், அண்ணா! உங்களுக்குப் புண்ணியம் உண்டு" என்றான் இளஞ்சாத்தன். "நான் புண்ணியத்துக்குச் செய்ய முடியாது.என்னிடம் இருக்கும் மருந்து விலை ஏறியது. அரசர், இளவரசர்களுக்காகச் செய்ப்பட்டது. ஆனால் கூனி இடையில் செருகியிருக்கும் மூன்று வேப்பங் கழிகளையும் கொடுத்தால், மருந்திடுவேன்” என்றான் வழித்துணை வேலன்.

"நற்செயலுக்குக் கூலியா பெறுவது?" என்று இளஞ் சாத்தன் நினைத்தான். ஆனால் ஒன்றும் கூறவில்லை. கிழவியும் சற்றுத் தயங்கினாள். ஆனால் காலின் நோவு அவளை விரைவில் இணங்க வைத்தது.

வழித்துணை வேலன் இடுப்பிலிருந்து ஒரு புட்டி எடுத்தான். அதிலுள்ள மையின் தடம்பட்டதுமே, கிழவிக்கு நோவகன்றது. அவள் முன்னிலும் வலுவுடன் எழுந்து நடக்க முடிந்தது. மகிழ்வுடன் அவள் வேப்பங்கழிகளை வழித்துணை வேலனிடம் தந்தாள்.

அவள் இளஞ்சாத்தனுக்கே நன்றி காட்டுவது போல் அவனைக் கனிவுடன் நோக்கினாள். ஆயினும் வெளிப்படையாக, இருவருக்குமே அவள் நன்றி செலுத்தினாள். "நோவு தீர்ந்ததற்காக மட்டும் நான் கழிகளைக் கொடுத்துவிடவில்லை. நீங்கள் நல்லவர்கள். உங்களுக்கு இது பயன்படும்” என்று அவள் கூறிச் சென்றாள்.

“நீங்கள்” என்று இருவரையும் குறித்த போதும், அவள் இளஞ்சாத்தனையே குறிப்பாகப் பார்த்தாள்.