உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

83

மறுநாள் உழைக்கவே வேண்டி வந்தது. முதல் முதல் ஒருநாள் தங்கியிருந்த பாவத்தால், அரச குடும்பம் ஒரு விடுதிக்காரிக்கு மீளா அடிமையாயிற்று.

கொடைமீளியின் வேலை பெரும்பாலும் காட்டுப் புறங்களிலேயே கழிந்தது. அவன் விடுதிக்கு வேண்டிய விறகைக் காட்டிலிருந்து வெட்டித் தன் தலையிலேயே தூக்கிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. அது அவனுக்கு எவ்வளவு கடுமை யானாலும், மனைவி மக்களை எண்ணி அதைத் தளராமல் செய்தான். ஆனால், அதே சமயம் அரசி சேதாம்பற்செல்வியின் நிலையும் குழந்தைகளின் நிலையும்கூடக் கடுமையாக, இருந்தன. அரசி சமையல் வேலை முழுவதையும் செய்தாள். அவளுக்கு முன் அவ்வேலையிலிருந்த மற்ற வேலைக்காரர்கள் நீக்கப்பட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள் பரிமாறும் வேலையிலும் வெளியே ஏவல்கள் செய்யும் வேலையிலும் இட்டுத் துவைக்கப்பட்டனர்.

தாய் தந்தையர் ஒருவரை ஒருவரோ, தங்கள் குழந்தை களையோ பார்க்கக்கூட வாய்ப்பு ஏற்படவில்லை. குழந்தைகளை எண்ணித் தாயும், மனைவி மக்களை எண்ணி அரசனும் ஓயாது கவலைப்பட்டுக் கவலைப்பட்டு உருகினர்.

அவர்கள் துன்பங்கள் இவற்றுடன் நிற்கவில்லை. ஒரு புதிய துயர் உண்டாயிற்று. விடுதியில் ஒருநாள் ஓர் அயல் நாட்டு வணிகன் தங்கினான். வேலைக்காரி நிலையில் இருந்த அரசியை அவன் பார்க்க நேர்ந்தது. அவள் அழகைக் கண்டு, அவன் அவளைத் தானே மனைவியாக்கிக் கொள்ள எண்ணினான். அதற்காக அவன் விடுதிக்காரியிடம் கைந்நிறையப் பணமும் கொடுத்தான்.பண அவாவால் கிழவி அதற்கு இணங்கினாள்.

வணிகனுக்குக் கப்பலில் உணவு கொண்டு போய்க் கொடுக்கும்படி விடுதிக்காரி சேதாம்பற் செல்வியை அனுப்பினாள். வணிகனுடன் அவள் செய்திருந்த சூழ்ச்சியின்படி,அவள் கப்பலில் வணிகன் அறைக்குள் நுழைந்ததும், கப்பல் பாய் விரித்தோடிற்று.

அரசி தன் நிலையறியுமுன் கப்பல் நடுக்கடலில் சென்று விட்டது.

கணவனையும் குழந்தைகளையும் நினைத்து அவள்

துடித்தாள்.