உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 251

கீவ் அவன் நிலைகண்டு இரங்கினான். “புட்டி சாப்பிடுவது அப்புறமிருக்கட்டும். அந்தப் புட்டிச்சாத்தன் எங்கே? அதை நான் விலைக்கு வாங்கிக்கொண்டு விடுகிறேன். இதோ, ஒரு சிறுகாசு, அதைக்கொடு” என்றான்.

நண்பன் புட்டிச் சாத்தனை உட்சட்டையின் உட்பைக்குள் செருகி வைத்திருந்தான். அதைத் தட்டிக் காட்டி ‘ஒரு காசா! என்னை அவ்வளவு பைத்தியக்காரனென்றா நினைத்தாய்? குடிவெறியில் என் குடிச் செல்வத்தை மறந்து கொடுத்து விடுவேன் என்று பார்த்தாயா? ஒரு சிறு காசல்ல. ஒன்பது நூறாயிரம் பொன் காடுத்தாலும் இனி இந்தப் புட்டி என்னிடமிருந்து வராது. என்னை நீ கொன்றுவிட்டால் கூட அந்தப் புட்டியையும் புட்டிச் சாத்தனையும் விழுங்கிவிட்டுத் தான் உயிர் விடுவேன்” என்றான்.

கீவுக்கு அதனை அப்படியே விட்டுச் சொல்ல மனம் வரவில்லை. அந்தப் புட்டியை வைத்திருப்பவனுக்கு நேரவிருக்கும் நரக வேதனையை எடுத்து மீண்டும் விளக்கினான்.

‘புட்டிகளின் அருமை தெரியாதவர்களிடம் சொல்லு அண்ணே, இந்தக் கதை எல்லாம்! எனக்குக் குடிக்கக் குடிக்கப் புட்டிதருகிற இந்தச் செல்வத்தை நான் ஒரு நாளும் கொடுக்க மாட்டேன். போ, இங்கே நின்று என்னைத் தடுத்தால், உன்னைக் கொன்று போடுவேன்.’ என்று கூறிக் கொண்டே தள்ளாடித் தள்ளாடி இருட்டில் மறைந்தான்.

கீவ் முதலில் தான் கண்ட காட்சி உண்மைதானா கனவா என்று உணரமுடியவில்லை. ஆனால், ஆர அமர எண்ணிப் பார்த்தபின், நண்பன் செயல் அவனுக்குப் புரிந்தது. குடிப்பதல்லாமல் வேறு எதுவும் நாடாத அவன் மற்ற எல்லாரையும்விடப் புட்டிச்சாத்தனின் பிடிக்கு உகந்தவன். நரகில் கூடக் குடிக்க வழியிருந்தால், அதை வானுலகாகக் கருதுபவன் அவன்.

ஹவாய்க்குப் புறப்பட ஏற்கெனவே குறிப்பிட்ட நாளிலேயே கோக்குவாவுடன் கீவ் கப்பலேறினான். புட்டிச்சாத்தன்மூலம் கோக்குவாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட துன்பங்களுக்கு ஓர் எல்லை ஏற்பட்டது. ஆனால் புட்டிச்சாத்தன் தந்த செல்வம்மட்டும் இன்னும் வாழ்வில் வளமூட்டிற்று.