உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. ஐம்பொன் மரம்

ஏழாரம் என்ற நாட்டில் சேந்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் முதல் மனைவி சிலம்பன் என்று புதல்வனைப் பெற்றெடுத்துப் பின் இறந்து போனாள். சேந்தன் இரண்டாவ தாக ஒரு மனைவியைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கும் கங்கன், கலிங்கன் என்ற இரு புதல்வர் இருந்தனர்.

அரசிக்குச் சிலம்பன்மீது எப்போதும் பொறாமை மிகுதி யாயிருந்தது. அவன் மூத்தவனாயினும் எளிதில் அரசுரிமை பெறாதபடி செய்ய, அவள் அரும்பாடு பட்டாள். அரசனிடம் அவனைப் பற்றி ஓயாது கோள் சொல்லி, அரசனுக்கு அவன் மீது வெறுப்பூட்ட முயன்றாள். இதன் பயனாக அவனும் அவன் செவிலித் தாயும் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டனர். அவர்கள் நகரெல்லையில் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தனர்.

சிலம்பனுக்கு அரசுரிமையில் பங்குகூடத் தராமல் நாட்டைக் கங்கனுக்கும் கலிங்கனுக்கும் மட்டும் பங்கு போட்டுக் கொடுக்கும்படி அவள் அரசனை வற்புறுத்தினாள். அரசன் அவள் வேண்டு கோளையும் மறுக்க முடியாமல், மூத்த மகனையும் விலக்க முடியாமல் வாளா இருந்தான்.

ஒருநாள் அரசன் ஒரு புதுமையான கனவு கண்டான்.அவன் முன் ஓர் அழகிய மாமரம் நின்றது. அதன் வேர்கள் வங்கமாகவும், அடிமரம் இரும்பாகவும், கிளைகள் செம்பாகவும், இலைகள் வெள்ளியாகவும், பூவும் காய் கனிகளும் தங்கமாகவும் இருந்தன. அது காண்போர் வியக்கத்தக்க முறையில் ஆடிப்பாடிற்று.

ஐம்பொன் மாமரத்தின் ஆடல் பாடலைக் கனவில் மட்டுமின்றி, நனவிலும் காண அரசன் அவாக்கொண்டான்.அந்த மரம் தன்முன் ஆடும்படி செய்பவர்களுக்கு நாட்டில் பாதி தருவதாக அவன் பறை சாற்றினான்.