உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

47

வேறு யாராவது ஐம்பொன் மாமரத்தைக் கொண்டு வந்து பாதி நாட்டைக் கொண்டுபோய் விடுவார்களோ என்று கங்கனும் கலிங்கனும் அஞ்சினார்கள். ஆகவே, அவர்களிருவரும் தாமே அம்மரத்தைத் தேடப் புறப்பட்டார்கள்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு செல்வச் சீமாட்டியின் மாளிகை தென்பட்டது. சீமாட்டியின் பாங்கியர் வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் இளவரசர் இருவரையும் கண்டதும், அவர்களை அன்புடன் அழைத்தனர். “எம் தலைவி தாயம் ஆடுவதில் வல்லவள். அவளுடன் ஒன்றிரண்டு நாள் ஆடியிருந்து விருந்துண்டு செல்லுங்கள்” என்றார்கள்.

வேடிக்கை விளையாட்டு என்றால், கங்கனுக்கும், கலிங்கனுக்கும் பெருவிருப்பம், அவர்கள் சீமாட் சீமாட்டியின். விருந்தினராயிருந்து, பகலும் இரவும் அவளுடன் தாயமாடினர்.

சீமாட்டி ஒரு மாயக்காரி, அவள் கள்ள ஆட்டம் ஆடுவதில் கைதேர்ந்தவள், அரசர் பெருமக்களுடன் ஆடி அவர்கள் செல்வம் முழுவதும் கவர்ந்தபின், அவள் அவர்களைத் தன் ஏவலர்களாக ஆக்கி வந்தாள். அவள் மாளிகையிலுள்ள ஏவலர்கள் அத்தனை பேர்களும் இவ்வாறு அரசும், செல்வங்களும் இழந்த காவலர்களே.

கங்கனும் கலிங்கனும் மற்றக் காவலர்களைப் போலவே தம் செல்வங்களை இழந்த ஏவலர்களாயினர். ஐம்பொன் மாமரத்தைத் தேடிவந்த அவர்கள் முயற்சியும் முற்றுப் பெறாது போயிற்று.

ஐம்பொன் மாமரத்தைத் தேடச் சென்ற புதல்வர் இருவரும் திரும்பாதது கண்டு, அரசி கலங்கினாள். ஆனால் சிலம்பன் அவளிடம் வந்து ஆறுதல் கூறினான். “நான் எப்படியும் சென்று அவர்களை மீட்பேன்" என்று கூறினான். அரசனிடமும், "தம்பிமார்களை மீட்பதுடன், முடியுமானால் ஐம்பொன் மாமரத்தையும் தேடிக் கொண்டு வருவேன்" என்று கூறிச் சென்றான்.

கங்கனையும் கலிங்கனையும் போலவே, சிலம்பனும் சீமாட்டியின் மாளிகை வழியாகச் சென்றான். சீமாட்டியின் பாங்கியர் அவனையும் அன்புடன் அழைத்தனர். அவன் சீமாட்டி யின் விருந்தினனாய் அவளுடன் இருந்து தாயமாடினான்.