உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

247

11. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

பெரியார் ஒருவருக்கு அவருடைய நண்பர், அவர் பிறந்த நாள் விழாவைப் பாராட்டும் பொருட்டு இனிய பழ வகைகளும் தின்பண்டங்களும் தம் சிறுவன் மூலம் அனுப்பி வைத்தார். சிறுவன் பெரியவர்களிடம் வணக்க ஒடுக்கமாக நடக்கப் பழகியவனாதலால், நெடுநேரம் அவர் அவனைப் பாராததுபோல இருந்தும் பொறுமையாகப் பழத் தட்டுடன் நின்றிருந்தான்.கடைசியில் அவன் பொறுமையிழந்து, “ஐயா, என் தந்தை இப்பழத் தட்டைத் தங்களிடம் தரச்சொன்னார்.பெற்றுக் கொள்ளுங்கள்.” என்றான். பெரியவர் அப்போது அவனைப் பார்த்து, “உன் தந்தை உனக்குக் கற்பித்துக் கொடுத்த வணக்கம் ஒடுக்கம் இவ்வளவுதானா? பெரியவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நான் காட்டுகிறேன். நீ எனது இடத்தில் இரு. நான் நடந்து கொள்வதைப் பார்" என்று கூறிவிட்டு வெளியிற் சென்றார்.

சிறிது நேரத்திற்குள் அவர் தட்டுடன் வந்து "ஐயா, அன்புகூர்ந்து இக்காணிக்கையை ஏற்றுக் கொண்டருளுங்கள்” என்றார். சிறுவன் உடனே அவர் வியக்கும் வண்ணம், “மிகவும் மகிழ்ச்சி இப்படி வந்து உட்கார் தம்பி. நீ மிகவும் தொந்தரவு எடுத்துக்கொண்டு விட்டாய். இதோ ஒரு பழமும் சில திண்பண்டங்களும் தின்கிறாயா?” என்றான்.

அவனுக்கு சிறுவர் நடந்து கொள்வது எப்படி என்று தாம் கற்பிக்கப்போக, அவன் பெரியோர் எப்படி நடப்ப தென்று தமக்குக் கற்பித்துவிட்ட நயத்தை எண்ணி, அவர் சிறுவனைப் பாராட்டி மெச்சிக் கொண்டார். டி