உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

21

அறுவரும் கிளியைச் சூழ்ந்தார்கள். “கிளிகளுக்குள் அறிவிற் சிறந்த கிளியே! எங்களுக்கிடையேயுள்ள ஒரு வாய்ப் பூசலை நீ தீர்க்க வேண்டும். உன் அறிவு தீர்ப்பளிக்கட்டும். எங்களுக்குள் யார் முதன்மை அழகி? யார் கடைசி அழகி? சொல்” என்றனர்.

கிளி அவர்களை நன்றாக அறிந்திருந்தது. அவர்கள் திட்டத்தையும் நன்றாக உணர்ந்து கொண்டது. சிந்திப்பது போல அது சுற்றுமுற்றும் பார்த்தது. அறை முற்றிலும் வெளியே செல்லும் வழி இல்லாமலிருந்தது. ஆனால், காற்று நுழையும் புழைவாய் ஒன்று இருந்தது. இதை அது குறித்துக் கொண்டது. பின் அது வாய் திறந்து பேசத் தொடங்கிற்று.

66

"அன்னைமாரே! உங்கள் கேள்வி மிகமிகக் கடுமையானது. ஆயினும், நான் ஒவ்வொருவரையும் நன்றாகப் பார்த்தால், விடை கூற முடியும்.கூட்டிற்குள்ளிருந்து அப்படிப் பார்க்க முடியாது. திறந்துவிட்டதும், சுற்றி வந்து பார்த்துக் கூறுகிறேன்" என்றது.

அவர்கள் தயங்காமல் திறந்து விட்டனர். கழுத்தை முறிக்கும்போது அது ஓடினாலும், அறைக்குள்ளிருந்ததால், தப்ப முடியாது என்று அவர்கள் எண்ணினார்கள். கோக்கிளி அவர்களைச் சுற்றிச் சிறிது வட்டமிட்டது. அடுத்த கணம், அது விட்டத்தில் ஏறி அமர்ந்தது. அங்கிருந்தபடியே பேசிற்று.“நீங்கள் அழகிகளேயல்ல; கடல் கடந்து கடார நாட்டில் இருக்கிறாள் ஓர் அழகி, அவள் கால் தூசிக்கு நீங்கள் ஈடல்ல” என்று அது கூறிற்று.

அறுவரும் அதை எட்டிப் பிடிக்கப் பறந்தனர். ஆனால், கிளி பேசிக் கொண்டே, புழைவாய் வழியே வெளியே பறந்து ஓடிற்று. பக்கத்திலிருந்த ஒரு விறகு வெட்டியின் வீட்டில் அது தஞ்சம் புகுந்தது.

மன்னன் திரும்பிவந்ததும், கிளியைக் காணாமல் மறுகினான். அரசியர் அவனுக்கு உண்மையானதகவல் தெரிவிக்க வில்லை. “தீனியிடக் கதவு திறந்தவுடன் அது பறந்தோடிற்று. ஆகவே, அது நன்றிகெட்ட கிளி. அதற்குக் காட்டிய அருமையெல்லாம் வீண் அருமை” என்று அவர்கள் குற்றச் சாட்டுக் கூறினர்.