உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நீர் நங்கை

வைகா நாட்டில் வைவேல் என்று ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் அமைச்சன் பெயர் அறிவுக்கடல். மன்னனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் நிரம்பிய புதல்வன் இருந்தான். அவன் பெயர் மானவேல். அமைச்சன் அறிவுக் கடலின் மகன் வான்மதி. அவனுக்கு இரண்டாண்டுகளே இளையவனாயிருந்தான். இளவயது முதலே மானவேலும், வான்மதியும் ஒளியும் நிழலும்போல இணைபிரியாத தோழர்களாக வாழ்ந்தார்கள்.

மானவேலின் வீரத்துணிச்சல் கண்டு எல்லாரும் அவனைப் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் பாராட்டில் சிறிது கவலையும் கலந்திருந்தது. வான்மதியின் அமைதியும் நுண்ணறிவும் இந்தக் கவலை தீர்க்கத்தக்க நன்மருந்தாய் அமைந்திருந்தன. “வான்மதி உடனிருக்கும்வரை, மானவேல் பற்றிய அச்சம் நமக்குத் தேவையில்லை" என்று மன்னன் அடிக்கடி அமைச்சனிடம் கூறுவான். மைந்தனை மன்னன் பாராட்டுவதுகேட்டு அமைச்சன் முகம் மகிழ்ச்சிக் கடலில் குளித்தெழும்.

மானவேல் அடிக்கடி தன் நாட்டெல்லை கடந்து, காடு மேடுகளில் வேட்டையாடி வந்தான். அமைச்சன் மகன் வான்மதியும் அவனுடனே சென்றான். ஒருநாள் அவர்கள் ஆனைக் காட்டில் நெடுந்தொலை சென்று விட்டனர்.

திடுமென இருள் காட்டைக் கவ்விற்று. எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தங்குமிடம் தேடி எத்திசை செல்வது என்றும் அவர்களால் துணிய முடியவில்லை.

அந்தக் காட்டுக்குள்ளேயே ஒரு பாழடைந்த தெப்பக்குளம் இருந்தது. அதைச் சுற்றி நெடுந்தொலை மரஞ் செடி கொடிகள்