உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

|–

அப்பாத்துரையம் - 35

அவள் பெயர் பெய்வளை. மன்னன் மகன் குளத்திலிருந்து வந்த நங்கையை எண்ணியே பித்துப் பிடித்திருக்கிறான் என்பதை அவள் அறிந்தாள். நங்கையைக் கண்டு கைப்பற்ற முடியும் என்றும், அதனால் எழுமுடியின் பித்தம் தீரும் என்றும் அவள் கருதினாள். ஆனால், இச் செயலுக்கான பரிசுகள் அவளுக்குப் பயன்பட மாட்டா. அரசை அவள் ஆள முடியாது. கிழவிக்கு அப் பெண்ணும் பயன்பட வழியில்லை. ஆயினும் "ஆண்டு ஏறினாலும் ஆசை விடாது” அல்லவா? தன் மகனுக்கு அந்தப் பரிசுகளை வாங்கித்தர அவள் எண்ணினாள்.

பெய்வளைக்கு ஒரே புதல்வன் இருந்தான். அவன் பெயர் மாயாண்டி. அவனை எல்லோரும் மாயா என்றே அழைத்தனர். அவன் இயல்பிலேயே மந்தமதியுடையவன். கிழவியின் இளக்காரத்தால் அவன் கிட்டத்தட்ட கால் கிறுக்கனாயிருந்தான். அவன் எப்போதும் “மாயா மாயா காயா சோயா" என்று புலம்பிக் கொண்டு ஆடுவான். கிழவிக்கு அவன் கொடுத்த தொல்லை கொஞ்சநஞ்சமன்று. அடிக்கடி நாள் கணக்கிலும், வாரக் கணக்கிலும் அவன் எங்கெங்கேயோ ஓடிவிடுவான்.எங்கும் சுற்றிவிட்டுத் திடுமென வருவான்.

அவனது கல்லா உள்ளத்தில் உணவு ஒன்றே ஓயாத ஆசையாய் இருந்தது. அதற்கடுத்தபடியாக அவனுக்குத் திருமணத்திலும் ஒரு மட்டி ஆர்வம் இருந்தது. அவனை வீட்டில் தங்கவைக்கக் கிழவி அடிக்கடி அந்த ஆர்வத்தையே பயன்படுத்தினாள். "அடே மாயி, எங்கும் போகாதேடா! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன்" என்பாள். அவன் உடனே குதித்தாடிக் கொண்டு, ஒன்றிரண்டு நாழிகை வீட்டிலேயே சுற்றுவான்.

கிழவி மாயாண்டியை நினைத்துக் கொண்டே அரசன் மணி மார்பனிடம் சென்றாள். "நான் இளவரசனைக் குணப்படுத்த முடியும். நீங்கள் உறுதி கூறிய பாதி அரசையும், இளவரசியையும் என் புதல்வனுக்குக் கொடுப்பீர்களா?” என்றாள்.

அவள் குணப்படுத்த முடியும் என்று மன்னன் கருதவில்லை. ஆனால், குணப்படுத்துவதில் உள்ள ஆர்வத்தால், அப்படியே உறுதி கூறினான்.