உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

63

கிழவி மன்னனிடமிருந்து சில வேலையாட்களும் காவலாட்களும் பெற்றுக் குளக்கரை சென்றாள். குளக்கரையிலே மறைவான ஒரு குடிசை கட்டுவித்தாள். காவலரைச் சிறிது அப்பால் மறைவிலேயே தங்க வைத்தாள். நாள்தோறும் அவள் குளத்தின்மீதே கண்ணாகக் காத்திருந்தாள்.

அவள் அனுபவமிக்கவள். பெண் மனத்தின் இயல்பை நன்கறிந்தவள். ஆகவே, ஒரு தடவை வெளிவந்த நீர் நங்கை மறுபடியும் மீண்டும் வராமலிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

கிழவியின் நம்பிக்கை சரியானதாகவே அமைந்தது.அச்சம் செம்மலர்த்தாளை இரண்டு மூன்ற நாட்கள்தாம் தடுத்து வைத்தது. நாளாக ஆக ஆர்வம் பெருகிற்று. அச்சம் குறைவுற்றது. அவள் மீண்டும் மானவேல் உறங்கும் சமயத்தில் செம்மணி மாணிக்கத்துடன் கிளம்பினாள். இத்தடவை அவள் மிகவும் எச்சரிக்கையாகவே குளப்படியில் கால் வைத்தாள்.

சம்மலர்த்தாள் முற்றிலும் கரைமீது வரும்வரை, கிழவி பதுங்கி நின்றிருந்தாள். அதன் பின்னும் அவள் தன் நயமிக்க நடிப்பால் அவள் உள்ளத்தில் நன்னம்பிக்கை ஊட்டினாள். "குழந்தாய்! குளத்தில் சறுக்கி விடாதே.பார்த்துக் கால் வை. நான் பெரியவள்தானே அம்மா? உனக்குத் தலைகோதி விடுகிறேன்!” என்று அணுகினாள். அன்னையின் பாசமொழி போன்ற இப்பேச்சில் செம்மலர்த்தாள் அச்சம் முழுதும் அகன்றது. அவள் தலைமுடியைக் கிழவியிடம் விட்டு, அளவளாவி இருந்தாள்.

கிழவி முன்பே காவலரிடம் ஒரு சமிக்ஞைத் திட்டம் செய்திருந்தாள். தலையைக் கையில் பிடித்தபடியே சிறிது கனைத்துக் கொண்டாள். காவலர் உடனே வந்து செம்மலர்த் தாளைச் சிறைப்படுத்தினர். நீர்நங்கை ‘ஆ’வென அலறினாள். ஓட முயன்றாள்; ஆனால், அவள் முயற்சி காலங்கடந்ததாகி விட்டது. காவலருடனும் கிழவியுடனும் அவள் மணிமார்பன் அரண் மனைக்கே கொண்டு செல்லப்பட்டாள்.

அவளைக் கண்டதே, இளவரசன் எழுமுடியின் பித்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவன் தந்தையிடம் சென்று, “குளத்திலிருந்து எழுந்த பெண்ணையே நான் மணம் புரிய வேண்டும்” என்றான்.