உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அப்பாத்துரையம் - 35

அதற்கிடையில் உங்களுக்கு உணவு வேண்டுமே! நான் இலுப்பை மரமாக அமைந்து விட்டேன். ஆகவே உங்களுக்கு நான் இவ்வகையில் உதவ முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். உங்கள் கையில் உள்ள பணத்தால், அயலூரிலிருந்து உணவு தருவியுங்கள்!" என்றது.

அவர்களிடம் பணம் எதுவுமில்லை. ஆனால், செங்கழுநீர் தன் ஆடையெங்கும் தேடியபோது, அதன் ஒரு முடிச்சில் ஐந்து செப்புக்காசுகள் அகப்பட்டன. அவற்றை அவள் போதணங்கிடம் தந்தாள். போதணங்கு அவற்றுடன் அருகிலுள்ள ஒரு நகர் சென்றாள். ஒரு பிட்டுக் கடையை அணுகி, "ஐயனே, ஐந்து காசுக்குப் பிட்டுக் கொடுங்கள்” என்றாள்.

ஒரு பிட்டின் விலையே பத்துக் காசாயிருந்தது. ஆகவே, கடைக்காரன் அவள் மீது சீறி விழுந்தான்.“அடபடுகிழமே, ஐந்து காசுக்குப் பிட்டா வாங்க வந்திருக்கிறாய்? இங்கே நில்லாது, ஓடிப்போ!” என்று துரத்தினான்.

பாவம், கிழவி கடைகடையாக அலைந்தாள். எங்கும் இதே கூக் குரல்தான் மறுமொழியாகக் கிடைத்தது. ஆனால், கடைசிக் கடைக்காரன் அவள் திக்கற்ற நிலைகண்டு இரங்கினான். ஐந்து காசைப் பெற்றுக் கொண்டு மடி கொள்ளுமட்டும் உதிர்ந்த பிட்டை அள்ளிக் கொடுத்தான். அவள் மகிழ்வுடன் திரும்பினாள்.

செங்கழுநீரிடம் போதணங்கு பிட்டைக் கொடுத்தாள். ஆனால், செங்கழுநீர் அதை இலுப்பை மூதணங்கின் முன் வைத்தாள். “ஆருயிர்த் தாயே! முதலில் நீங்கள் பசியாறுங்கள்" என்றாள்.

மூதணங்கின் உள்ளங் குளிர்ந்தது. “மக்கள் அன்பே தாய்க்கு உணவு, அம்மா! எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், உங்களுக்கு இதன் தேவை மிகப் பெரிது. பாதியைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.மறுபாதியில் இருவரும் உண்டதுபோக, மீதியைக் குட்டையைச் சுற்றிலும் தூவுங்கள்” என்றது.

அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் இரவும் அவர்கள் மரத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்தனர். கொடு விலங்குகள் அன்றும் அங்கே வந்து ஆர்ப்பரித்தன. மரத்தின்