உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

II.

அப்பாத்துரையம் - 36

அவள் அறிவை அவன் மெச்சினான். அப்படியே அவள் அழகிய கூந்தலைச் சுருட்டி ஒரு தலைப்பாகைக்குள் மறைத்தான். உயர்தர ஆடவர் அணியும் அங்கி ஒன்றைப் போர்த்தினான். அவள் முற்றிலும் ஆடவனாகவே தோற்றமளித்தாள்.

இருவரும் விரைந்து நடந்தனர். அருகிலுள்ள அலெப்போ நகரை அணுகினர். இளவரசிக்கு உண்மையிலேயே பசி காதை அடைத்தது. அத்துடன் உடம்புக்கும் நலமில்லை என்று கூறி அவள் கீழே சாய்ந்துவிட்டாள்.

நகரின் உள்ளே மருந்தும் உணவும், தேடி வருவதாகக் கூறி இளவரசியை அங்கேயே விட்டுவிட்டு அக்தார் சென்றான்.

அன்று அலெப்போ நகரெங்கும் குழப்பமாயிருந்தது. அரசனுக்கு எதிரியாயிருந்த யாரோ இரவில் அவனைக் குத்திப் படுகாயப் படுத்தி விட்டனர். அரசன் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். காவலர் எங்கும் கொலையாளியைத் தேடித் திரிந்தனர்.

நகரின் உள்ளே சென்ற அக்தார், புது ஊராதலால் வழி தெரியாமல் திகைத்து நின்றான். இதனால் அவன் அயலான் என்பது எளிதில் புலப்பட்டது. காவலர் அவனைப் பிடித்து உசாவத் தொடங்கினர். அச்சமயம் உரூம் நகரிலிருந்து வந்திருந்த ஒருவன் “இவன் தான் அக்தார், பேர்போன திருடன், கொள்ளைக் காரன், கொலைக்காரன் என்று அறிமுகப்படுத்தினான். அவனைக் காவலில் வைக்க இதுவே போதிய சான்றாயமைந்தது.

மன்னன் நிலை இதற்குள் மோசமாயிற்று. அவன் அமைச்சர் படைத்தலைவர்களை வருவித்து, “நான் இறந்தால், என் வேட்டை நாயை அவிழ்த்து விடுங்கள். அது யார் ஆடையைப் பற்றி இழுக்கிறதோ, அவனையே அரசனாக்குங்கள்" என்று கதறிக் கடைசி மூச்சு விட்டான்.

மன்னன் உயிர் நீத்தபின் மூன்று நாள் நகர் முழுதும் அருந்துயர் கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் மன்னனின் வேட்டை நாய் நகரில் அவிழ்த்து விடப்பட்டது.

அக்தார் திரும்பி வராதது கண்டு இளவரசி மகீமன்ஃசார் தன் ஆண் உடையிலேயே நகருக்குள் வந்து யாரிடம் அடைக்கலம் பெறுவது என்று அறியாமல் சுற்றித் திரிந்தாள்.