உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

17

“உன்னைத்தான் நான் அப்பக்கமே நாடவேண்டாம்என்று சொல்லி யிருந்தேனே! ஏன் அந்தப் பிச்சைக்காரியுடன் சேர்ந்து சதி செய்கிறாய்,” என்று வேலன் கடிந்து பேசினான்.

"என் சதிக்கு என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஒன்று மறியாத இக்குழந்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்றாள் நெல்லை.

நெல்லை வெளியேறுதல்

"சரி அப்படியே ஆகட்டும்; குழந்தையை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நீ இனி உன் நண்பர்களுடனேயே போயிருக்கலாம். இங்கிருக்க வேண்டியதில்லை," என்றான்

வேலன்.

நெல்லை தன் காரியம் கைகூடிற்று என்று மகிழ்ந்து வள்ளியிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் விரித்துரைத்து, 'இப்போது எனக்கு மனம் குளிர்ந்தது. நீலனுக்கு என்னால் நேர்ந்த தீமைகளில் ஒரு சிறிதேனும் அகன்றதனால் நான் மகிழ்ச்சி யடைகிறேன். இனி நாமிருவரும் உழைத்து, நீலனின் பெயரைக் காப்போம்” என்றாள்.

ஆனால் வள்ளி, “அம்மா, எனக்காக நீ வீட்டை விட்டு வெளிவரும்படி நான் விடமாட்டேன். அஃதோடு குழந்தையையும் இவ்வளவு கல்நெஞ்சமுடைய அந்தக் கிழவனிடம் நான் ஒப்படைக்க விரும்பவில்லை. நீ என்னுடன் வா; அக்குழந்தையை நான் திரும்பவும் அழைத்து வருகிறேன்,” என்றாள். நெல்லை வேண்டா வெறுப்பாய் வள்ளியுடன் சென்றாள்.

வேலனின் மனமாற்றம்

அவர்கள் செல்லும் போது வீட்டுவாயில் திறந்திருந்தது. நீலனின் குழந்தை வேலன் மடியில் உட்கார்ந்து கொண்டு அவன் மூக்குக் கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. நெல்லையையும், வள்ளியையும் கண்டதும் அவன் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு விட்டு எழுந்தான்; குழந்தை தன் தாயிடம் ஓடியது.