உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அப்பாத்துரையம் - 36

வள்ளி, குழந்தையைத் தோளோடு சேர்த்துக் கொண்டு வேலனை நோக்கி, "ஐயனே! என் பிள்ளைக்காக நீங்கள் தங்கள் மருமகளை வெளியேற்ற வேண்டாம். அன்புகூர்ந்து அவளைத் திரும்ப ஏற்றுக் கொள்ளுங்கள். பிள்ளை எவ்வளவு துன்பப் பட்டாலும் என்னிடமே இருக்கட்டும்; தங்களிடமிருந்தால் தங்களைப் போன்றே அதுவும் கல்நெஞ்சம் உடையதாக ஆகிவிடக் கூடும்; அப்படி ஆதல் கூடாது,” என்றாள்.

கிழவன் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. ஆனால், சற்றுநேரத்தில் அவன் கடுமையெல்லாம் பறந்து போயிற்று. "ஆம்; நான் கடுமையுடையனே; கடுமையால் பிள்ளையை இழந்தேன்; பிள்ளையினும் அருமையாய் வளர்த்த மருமகளை வெளியேற்றினேன். ஆனால், இச்சிறுபிள்ளையிடம் என் கடுமை செல்லவில்லை; அதை விட்டு நீங்கி, என்னாலிருக்க முடியவில்லை; அதன் மூலம் என் பிள்ளையின் அருமையை அறிந்தேன். பிள்ளையை இழந்த என் வீட்டில் நீங்களேனும் இருந்து என் வெறுமையைக் குறையுங்கள்,” என்றான்.

நீலனின் பிள்ளை, அம்மூவருக்கும் நீலனின் வாழ்வை நினைவூட்டித் துன்பமும், இன்பமும் மாறிமாறி அளித்த வண்ணம் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் ஒருவாறு நிறைவுபடுத்தினான்.