சேக்சுபியர் கதைகள் - 1
75
அவளும் இன்மொழி கூறித் தன் உள்ளத்தை மகிழ்விப்பாள் என்பதில் அவனுக்கு ஐயமே இல்லை. அன்றியும் அவர் கூறியவற்றைவிட அவள் வாய்ச்சொல் விழுமியதாக இருக்குமென்றும் எண்ணினான்.
ஆனால், கார்டெலியாவுக்கு உண்மை தெரியும். தன் தமக்கையார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் தந்தையைப் புகழ்ந்தது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தந்தை நாட்டை இழக்கச் செய்வதே அவர் பேச்சின் நோக்கம் என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு தந்தை நாடிழந்தபின் தம் கணவருடன் தாம் அரசாட்சி நடாத்தி மகிழ எண்ணங் கொண்டிருத்தலையும் அவள் அறிந்தாள். ஆகையால், அவள் தந்தையை நோக்கி, “தந்தையே என் கடமைக்கேற்றவாறு யான் உம்மிடம் அன்பு செலுத்துகின்றேன். அந்த அளவிற்கு மிகுதலும் குறைதலும் இல்லை,” என்று சுருங்கக் கூறினாள்.
தன் செல்வமகளிடம் இத்தகைய நன்றியற்ற மாற்றத்தை அரசன் எதிர்பார்க்கவில்லை. “கார்டெலியா! உன் சொற்களைத் திருத்திக்கொள். நன்றாக எண்ணிப்பார். நீ பெறவேண்டிய செல்வத்தை இழக்கவேண்டா,” என்று அவளிடம் கூறினான்.
"தந்தையே! என்னைப் பெற்றுவளர்த்து அன்போடு போற்றிய நன்றியை நான் மறக்கவில்லை. என்னால் இயன்றவரை கைம்மாறு செய்யும் கடமை உடையேன். உம்முடைய கட்டளைப் படி நடக்கிறேன். உம்மிடம் அன்பு செலுத்துகிறேன். உம்மிடம் வணக்கமாய் ஒழுகுகிறேன். ஆனால், என் தமக்கையரைப் போல ஆரவாரமாய்ப் பேச என்னால் இயலாது; இந்த நிலவுலகத்தில் உம்மிடம் தவிர வேறொருவரிடமும் அன்பு இல்லை என்று உறுதியளிக்கவும் இயலாது. அவர்கள் இருவரும் சொன்னவை உண்மையா? வேறொருவரிடமும் தமக்கு அன்பு இல்லை என்று கூறினார்களே! அப்படியானால், அவர்கள் ஏன் கணவரை நாடி மணம் செய்து கொண்டார்கள்? நான் மணம் செய்து கொள்வதானால், என் காதலரிடம் என் அன்பின் ஒரு பெரும் பகுதி செல்லாதோ அவர் பொருட்டு எனக்குச் சில கடமைகள் ஏற்படும் அல்லவோ? யான் உம்மையே முழு அன்புடன் போற்ற வேண்டுமானால், என் தமக்கையார் போல மணம் செய்து கொள்ளல் தகுதியோ?" என்று கார்டெலியா எடுத்துரைத்தாள்.