உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கு

அப்பாத்துரையம் – 37

அரசன் அவன் உரிமையைப் போக்கினான்; இன்னும் ஐந்து நாட்களுக்கு மேல் பிரிட்டன் எல்லைக்குள் இருப்பின் கொல்லப்படுவான் என்றும் எச்சரித்தான். அத்தலைவனும் தயங்கவில்லை, "அரசே! உம்மிடம் விடை பெறுகிறேன். இத்தகைய போக்கு உம்மிடம் காணப்படுவதால், யான் இங்கு இருந்தாலும் குற்றமே ஆகும். திறனுற எண்ணி நலனுறப் பேசிய கார்டெலியாவைத் தெய்வங்கள் காப்பனவாக! நீண்ட பேச்சுகளைப் பேசிய ஏனை மகளிர் தம் அன்பிற்கு ஏற்ற பயன் பெறுவாராக! நான் எங்கேனும் புதியதொரு நாடு புகுந்து தொன்னெறி போற்றி வாழ்வேனாக!” என்று கூறிப் பிரிந்தான்.

2. சொல்லுதல் எளிது: செய்தல் அரிது

பிரான்சு மன்னனுக்கும் பர்கண்டித் தலைவனுக்கும் அரசன் தன் முடிவை அறிவித்தான். கார்டெலியா இப்போது தன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகித் தனக்குரிய செல்வம் இழந்து நிற்பதால், அவளை மணக்க இனியும் அவர்கள் விரும்புகின்றனரா என்பதை அறிய விரும்பினான். கார்டெலியா உற்ற அந்நிலையில் தான் அவளைத் துணைவியாகக் கொள்ள விரும்பவில்லை என்று பர்கண்டித் தலைவன் தன் முயற்சியைக் கைவிட்டான்.

ஆனால், பிரான்சு மன்னனோ, தந்தை வெறுப்புக் கொள்ளுமாறு கார்டெலியா இழைத்த தவற்றின் தன்மையையும், தமக்கையர்போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பயிற்சியில்லாத குறையையும் ஆராய்ந்தறிந்தவன்; அதனால், கார்டெலியாவின் கையினைப் பற்றியவனாய், “உன்னுடைய நல்ல பண்புகளே அரசுரிமையினும் சிறந்த செல்வமாகும். தந்தை உம்மீது அன்பு கொள்ளாதவர் ஆயினும், அவரிடம் கூறி விடை பெறுக. உன் தமக்கையரிடமும் விடை பெறுக. என்னுடன் வருக. என் வாழ்க்கைத் துணைவியாகவும் சீர்மிக்க பிரான்சு நாட்டின் அரசியாகவும் விளங்குக. உன் தமக்கையர் பெற்றவற்றினும் பெருமை மிக்க உரிமைகளைப் பெறுக,” என்று உரைத்தான். கார்டெலியாவின்பால் கொண்ட காதலை ஒரு நொடிப் பொழுதில் மாற்றிக்கொண்ட காரணத்தால், அவன் பர்கண்டித் தலைவனை இகழ்ந்தான்.