உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

79

பிறகு, கார்டெலியா கண்ணீர் கலங்கித் தமக்கையரை நோக்கி, “தமக்கையீர்! உங்கள் வாக்குறுதி தவறாமல் தந்தையை அன்போடு பாதுகாத்துவர வேண்டுகிறேன்,” என்று சொல்லி விடைபெற நின்றாள்; அவர்கள் இருவரும் உடனே, “போதும்; நீ எங்களுக்கு ஒன்றும் அறிவுறுத்த வேண்டுவதில்லை; எங்கள் கடமையை அறிவோம். நீ உன் கணவர் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்துகொண்டிரு; அவர்தாம் உன்னைப் பெறற்கரிய பேறாகக் கொண்டு மகிழ்ந்தாரே,” என்று ஏனைக் குறிப்புடன் கூறினார்கள். கார்டெலியாவுக்கு அவர்களின் வஞ்சகமும் விரகும் தெரியும்; ஆகையால், வருந்திய மனத்தோடு பிரியலுற்றாள்; அவர்களிடம் தந்தை வாழ்வதைவிட வேறு எங்கேனும் நல்ல தோரிடத்தில் இருக்கலாகாதா என எண்ணிச் சென்றாள்.

கார்டெலியா பிரிந்ததும், தமக்கையர்தம் கொடிய இயல்பு வெளிப்படலாயிற்று. முன்செய்த ஏற்பாட்டின்படி முதல் திங்களில் தன் மூத்தமகள் கானெரில் அரண்மனையில் லியர் வாழ்ந்து வந்தான். அத்திங்கள் முடிவதற்குள்ளாகவே, சொல்லுதல் எளிது என்பதும் சொல்லிய வண்ணம் செயல் அரிது என்பதும் அவனுக்கு விளங்கின. தந்தை தரவேண்டிய யாவற்றையும் அவன் தலையில் அணிந்திருந்த முடியினையும் கவர்ந்து கொண்ட அக்கீழ் மகள் இப்போது என் செய்தாள்? தான் இன்னும் அரசனே என்று எண்ணி மகிழ்வதற்காக லியர் தன்பால் வைத்திருந்த பரிவாரத்தைக் குறித்து முணுமுணுத்தாள்; அவனையும் அவன் வீரர் நூற்றுவரையும் காண அவள் நெஞ்சு பொறுக்கவில்லை. தந்தையைக் காணும் போதெல்லாம் அவள் முகஞ் சுளித்தாள். தந்தை தன்னுடன் பேசவந்த போதெல்லாம், உடல் நலமில்லை என்றோ, வேறு காரணம் கூறியோ அவனைப் பார்க்கவும் மறுத்துவிட்டாள். ஏன்? அவனுடைய முதுமையை மிகப் பெருந் தொல்லையாகவும், வீரர் நூற்றுவரும் இருத்தலை வீண் செலவாகவும் அவள் கருதினாள்.

கானெரில், தந்தைக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தான் தவறியதோடு நில்லாமல், தன் ஏவலர் தவறி நடக்கவும் காரணமானாள். தலைவியாகிய அவள் நடக்கையைக் கண்டோ, அல்லது அவள் மறைவாகச் சொல்லியிருக்கக் கூடியவற்றைக் கேட்டோ, அவளுடைய ஏவலரும் லியரைப் போற்றாது