80
அப்பாத்துரையம் - 37
புறக்கணித்தார்; லியர் இட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். சில வேளைகளில் அவன் கூறிய கட்டளை தம் காதில் விழாதது போலப் போய்விட்டனர்.
தன் மகள் இவ்வாறு நடக்கத் தொடங்கிவிட்டதை லியர் அறிந்து கொண்டான்; ஆயினும் அதைப் பற்றி ஒன்றும் அறியாதவன் போலப் பலநாளும் வாளா இருந்தான். தாம் செய்த தவறே தம்மை வருத்தும் போது மக்கள் இவ்வாறு இருத்தல் இயற்கைதானே?
பொய்யும் போலி வாழ்வும் இன்பம் வந்துற்ற காலத்தினும் திருந்துவதில்லை. அதுபோலவே, உண்மையன்பும் பண்பும் துன்பம் வந்துற்றபோதும் மாறுவதில்லை. இதனைக் கென்ட் தலைவன் ஒழுக்கத்திலிருந்து நன்கு அறியலாம். அவன் லியர் மன்னனால் கைவிடப்பட்ட போதிலும், பிரிட்டனை விட்டுச் செல்லாவிடின் கொல்வதாக அச்சுறுத்தப்பட்ட போதிலும், தன் தலைவனாகிய அரசனுக்குத் தான் பயன்படுமாறு வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து, வருவன வருக என்று நாட்டிலேயே தங்கியருந்தான். அரசனுக்குக் கீழ்ப்படிந்து ஒழுகும் நல்லொழுக்கத்தால் சில வேளைகளில் எவ்வளவு இடர்கள் நேர்கின்றன பாருங்கள்! ஆயினும், அவற்றால் இழிவு ஒன்றும் இல்லை. நன்றி மறவாது கடமையைச் செலுத்துதல் என்றும் உயர்வே அன்றோ?
அவன் தன் பெருமையையும் ஆடம்பரத்தையும் கைவிட்டு, ஏவலாளாக வேற்றுருவங்கொண்டான்; லியர் மன்னனிடம் ஏவல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். லியர் அவனை இன்னான் என அறியவில்லை; புதிய ஏவலாளின் பேச்சு வெளிப்படை யாகவும் நயமற்றதாகவும் இருத்தலை அறிந்து மகிழ்ந்தான். (அரசன் மகள் பேசிய பொன்மொழிகளின் பயனை உணர்ந்தமை யால் கென்ட் தலைவன் இனிய முறையில் புகழ்ந்து சொல்லுவதில் வெறுப்புக் கொண்டான்.) உடனே அரசன் அவனைத் தன் ஏவலாளாக ஏற்றுக் கொண்டான். தனக்கு நெருங்கிய அன்பனாக இருந்த கென்ட் தலைவன் அவன் என்ற ஐயமே லியர் நெஞ்சில் தோன்றவில்லை. கென்ட் தலைவன் தன் பெயர் கேயஸ்' என்று தெரிவித்துக் கொண்டான்.