உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

91

கானெரில், ரீகன் என்னும் கொடிய உயிர்கள் அவனைக் காதலித்துப் பொருந்துவதே. இவ்வாறு இருக்கும்போது, ரீகன் கணவனாகிய கார்ன்வால் தலைவன் இறந்து விட்டான். உடனே, ரீகன் கிளஸ்டர் தலைவனாகிய எட்மன்டை மணப்பதாகத் தெரிவித்துவிட்டாள். இதனால், கானெரில் மனத்தில் பொறாமை மிக்கது. ஏன் எனில், அவர்கள் இருவரிடத்திலும் தனித்தனியாக எட்மன்ட் தன் காதலைப் புலப்படுத்தியிருந்தான். கானெரில் கொண்ட பொறாமையால் தன் தங்கை ரீகனை நஞ்சு கொடுத்துக் கொன்றாள். இக்கொடுஞ் செயலை அவளுடைய கணவன் ஆல்பனித் தலைவன் அறிந்தான்; அவள் கிளஸ்டர் தலைவனிடம் கொண்ட கள்ளக் காதலைப் பற்றியும் அவன் எவ்வாறோ அறிந்தான்; ஆதலின் அவனை உடனே சிறையிலிட்டான். தன் காதலுக்கு நேர்ந்த ஏமாற்றத்தாலும் பொங்கி எழுந்த சினத்தாலும், விரைவில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். கொடியோர் இருவர்க்கும் இங்ஙனம் முடிவு கண்டது இறைவன் முறை.

எல்லோரும் இந்நிகழ்ச்சியைப் பற்றியே எண்ணி அவர்கள் இருவரும் மாண்டொழிந்தது மிகப் பொருத்தமானதே என்று வியந்தனர். அதே ஊழின் வியப்பான முறைப்படி கொடிய தொன்றும் நிகழ்ந்தது. நல்லொழுக்கமும் தூய உள்ளமும் இவ்வுலகத்தில் வெற்றியே தரும் என்று கூற முடியாது. இது கொடுமை நிறைந்ததோர் உண்மையாகும். கார்டெலியா குணக்குன்று; நல்லவள். அவள் நற்செயல்களுக்கு ஏற்ற நன்முடிவு ஏற்பட்டிருத்தல் வேண்டும். கானெரிலும் ரீகனும் தன் படைகளைத் திரட்டிக் கிளஸ்டர் தலைமையின் கீழ்ப்போர் செய்யுமாறு அனுப்பியிருந்தனர். அப்படைகள் வெற்றி பெற்றன. கிளஸ்டர் தலைவன், அரசுரிமையைக் கவர்வதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை ஒழித்திடும் சூழ்ச்சியில் வல்லவன்; அவன் சூழ்ச்சியில் கார்டெலியா சிறையில் கிடந்து மாண்டாள். பெற்றோரைப் போற்றி ஒழுகும் நல்லொழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உலகத்திற்கு விளக்கி விட்டு கார்டெலியாவை இளமையிலேயே கடவுளின் முறை கொண்டு சென்றது. மன்னன் லியரும் தன் செல்வமகள் மறைந்தபின் விரைந்து உலக வாழ்வை நீத்தான்.