உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

103

பிரயம் என்னும் கிழமன்னன் கொடுமையாய்க் கொல்லப் படுதல், அவன் குடிகளும் நகரமும் தீக்கிரையாக்கப்படுதல், முதியோளாகிய அவன் மனைவி பித்துப் பிடித்தவள்போல் வருந்தி அலைதல், அவள் அரண்மனையில் மேன்மாடிக்கும் கீழ்மாடிக்கும் ஓடித் திரிதல், முடி தரித்த தலையில் கந்தை அணிதல், அரசு கட்டிலிற் கேற்ற அழகிய உடையை விடுத்துக் கம்பளியைச் சுற்றிக் கொள்ளுதல் ஆகிய இவையனை வையனைத்தும் கண்டோர் உள்ளத்தை உருக்கிக் கண்ணீரைப் பெருக்கின. கதையை நடித்துக் காட்டிய கூத்தனும் உண்மையாகவே கசிந்து கண்ணீர் மல்கி அழுதான்.

உடனே ஹாம்லெத் பலவாறு எண்ணத் தொடங்கினான்; "இங்கு நிகழ்ந்தது நாடகமே; உண்மை அன்று; ஹெக்யுபா என்ற அந்த அரசி இறந்து பன்னூறு ஆண்டுகள் ஆயின. ஆயினும், இதை நடிக்கும் பொழுது இவன் நெஞ்சுருகி அழுதான் அல்லனோ? ஆனால், இந்த நாட்டில் அரசு செலுத்திய உண்மை அரசன்-அன்பான என் தந்தை கொல்லப்பட்டான். இதை நான் அறிவேன்; ஆயினும் உணர்வும் ஊக்கமும் இழந்து, பழிவாங்கும் முயற்சியும் சோர்ந்து இதுவரைக்கும் சோம்பித் தூங்கிக் கொண்டிருந்தேனே!" என்று வருந்தினான்; ஒரு நாடகத்தில் நடிப்போரும் அவர்தம் நடிப்பும் காண்போர் உள்ளத்தை உருக்குகின்ற ஆற்றலைக் கருதினான். அப்போது ஒரு கதை அவனுக்கு நினைவு வந்தது. கொலைஞன் ஒருவன் ஒரு நாடகத்திற்குச் சென்று காணுங்கால், அதில் கண்டதொரு கொலைக் காட்சியும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளும் அவன் செய்த கொலைக் குற்றத்தை நினைவுறுத்தின; அந்நாள் வரைக்கும் மறைத்து வைத்திருந்த தன் குற்றத்தை அவன் உடனே பலரும் அறியக் கூறிவிட்டானாம். இந்தக் கதையை ஹாம்லெத் நினைத்துக் கொண்டான். நன்று, நன்று, என் தந்தை கொலை யுண்டதற்கு ஒப்பான தொரு நாடகம் இவர்கள் நடிக்குமாறு செய்தல் வேண்டும். அப்போது அதைக் காணும் என் சிற்றப்பன் முகத்தில் தோன்றும் மாறுதல்களை நான் ஆராய்வேன். அவன் உண்மையாகவே என் தந்தையைக் கொன்றானா இல்லையா என்பதைத் தெளிவாக அறிவேன்,” என்று முடிவு செய்தான். அவ்வாறே கூத்தரைக்கொண்டு ஒரு நாடகம் நடிக்கச் செய்தான்;