உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

121

இவ்வன அரசனுக்கும் அரசிக்கும் இடையே ஒரு வருத்தந்தரும் பிணக்கு ஏற்பட்டது. அதன் பயனாக அவ்விருவரும் வழக்கம்போல அவ்வடர்ந்த காட்டில் முழு நிலவெரிக்கும் இரவுகளில் ஒன்றாய் உலாவுவதில்லை. அவர்களது குழாத்தைச் சேர்ந்த சிறு தெய்வ வடிவங்களும் அவர்கள் இருவரது சீற்றத்திற்கு அஞ்சி வாதுமைக் கொட்டைகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளத் தொடங்கின.

இப்பிணக்கிற்குக் காரணம் இந்தியாவிலிருந்து திதானியா கொண்டு வந்த ஓர் அழகிய சிறுவனேயாவன். அவன் முன்னம் திதானியாவுக்குத் தோழியாயிருந்த ஒருத்தியின் புதல்வன். அவன் தாய் இறந்தபின் அப்பையனைத் திதானியா அவனுடைய வளர்ப்புத் தாயிடமிருந்து கைப்பற்றித் தானே வளர்த்து வந்தாள்.

காதலர் கானகத்தே வருவதாகச் சொன்ன இரவில், திதானியா தன் உரிமைத் தோழியருடன் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது ஓபிரானும் அவன் குழாத்தினரும் எதிரே வந்தனர்.

ஓபிரான்: இறுமாப்பு மிக்க திதானியா! உனது வருகை என் மனத்திற்கு வெறுப்பையே தருகின்றது.

திதானியா:பொறுப்பற்ற அரசே! வருவது நீ என்பதை நான் காணவில்லை. தோழியரே! இவருறவு தகாது. இவ்விடம் விட்டு விரைவில் அகலுங்கள்.

ஓபிரான்: துணிச்சல் மிக்கவளே! சற்று நிற்பாயாக! நான் உன் கணவன் என்பதை நீ மறந்துவிட்டாய் போலும்! தன் ஓபிரான் விருப்பத்திற்குத் திதானியா ஏன் மாறாக நடக்க வேண்டும்? அச்சிறுவனை எனக்குப் பணியாளாகத் தருக.

திதானியா: அவ்வகையில் உமக்கு நெஞ்சு துடிக்க வேண்டாம். உமது வன அரசு முற்றிலும் கொடுத்தாலுங்கூட அச்சிறுவனை நீர் பெறமுடியாது.

இக்கடுஞ் சொற்களுடன் திதானியா மிகுந்த சினத்துடன் சென்றாள். ஓபிரானும், 'இப்போது நீ செல்க! விடியுமுன் இதற்காக உன்னை என்ன பாடுபடுத்துகிறேன் பார்' என்று கறுவிக்கொண்டான்.