உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அப்பாத்துரையம் – 37

தன் கணவனது மனத்தில் ஏதேனும் தப்பெண்ணம் இருக்குமோ என்று ஒரு சமயம் அவள் ஐயுறுவாள். ஆனால் அவள் கற்பின் உயர்வே இவ்வையத்தைக் கண்டித்தது. 'என் கணவனாவது, தப்பெண்ணமாவது! கதிரவனிலும் கறை இருக்குமோ?' என்று அவள் மனம் கூறிற்று. 'வெளியுலகில் அவருக்கு ஏதோ மனக்குழப்பம் தரும் செய்தி கிடைத்திருக்கும். அதனாலேயே என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று நினைத்தாள் உலகின் சூதறியாத அவ் ஆரணங்கு. 'மனிதர் என்ன இருந்தாலும் மனிதர் தாமே. வானவர் அல்லரே. மணநாள் அன்றுபோல் என்றும் இருப்பர் என்றெண்ண முடியுமா? அவரது காதலில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்யும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள், உயர்நெறியில் தளராத அந்நங்கை நல்லாள்.

7. டெஸ்டிமேனாவின் முடிவு

அடுத்த தடவை ஓதெல்லோ டெஸ்டிமோனாவைக் கண்டபோது, தெளிவாக அவள் கற்புநெறி தவறி, இன்னொருவனைக் காதலிப்பவள் என்று அவளிடம் கூறி அவளை வைதான். காதலிக்கப்பட்டவன் எவன் என்று மட்டும் கூறவில்லை. இதைக் கேட்டதும் அவள் உள்ளம் பருந்தின் பிடியுட்பட்ட புறாப்போல் துடித்தது. அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் வழிந்தன. நேர்மையான காலங்களில் அதன் ஒரு துளி விழுமுன், அவன் ஒரு நூறு தடவை உயிர்விட்டிருப்பான். இப்போது அவன் மனம் கல்லாய் விட்டது. உணர்ச்சியற்று, 'இந்த நாள் மட்டுந்தான் உனக்குத் துன்ப நாளென் று நீ அழுகிறாய் போலும்' என்றான். அவன் குறிப்பைத் தன் உயர் குணத்தின் காரணமாகவே அவள் அறிந்தாளில்லை. “எனக்கு எல்லாத் தீமைகளையும் தாங்க முடியும். வறுமையும் சரி, பிணியும் சரி, அவமதிப்பும் சரி; எனக்கு ஒன்றுமில்லை. ஆயின், உன் வஞ்சம், உன் ஏமாற்று, உன் அடாப்பழி என் நெஞ்சை அடர்த்துவிட்டது. நீ என் வாழ்க்கைக்கொருகளை ; நீ அழகால் மயக்கும் நமன்; கண் பார்வை ஒன்றினாலேயே கொல்லும் நச்சுப்பாம்பு" என்று பலவாறாக அவன் பிதற்றிப் புலம்பினான்; ஏசினான்; அழுதான். அவன் தன் கையை நெரித்துக் கறகறவென்று பற்களைக் கடித்தான்.விழிகள் அழலெழ உறுத்து