உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அப்பாத்துரையம் – 37

இன்னொரு பெண்ணுக்கும் உயிர் கொடுத்தவள் ஆவாய்” என்றான்.

இஸபெல்: துறவுருக் கொண்ட பெருந்தகையோய், தாங்கள் கூறுவது தக்கதாயின் அங்ஙனமே செய்வேன்.

துறவி: நான் கூறுவது தக்கதா அன்றா என்பதையே நீயே மதித்து விடை கூறலாம்.

உன்னை வஞ்சிக்க முயன்ற ஏஞ்செலோ ஒரு போலித் துறவி. அவனால் வாழ்க்கையிலிருந்து ஒரு பெண் தவிக்கின்றாள். அவள் பெயர் "மேரியானா. அவள் இந்நாட்டையடுத்த தீவின் இறைவனான "பிரடெரிக்கின் தங்கை. பிரடெரிக் அவளை இவ்வேஞ்செலோவுக்கு மணம் செய்துகொடுத்தான். தங்கைக்குப் பரிசமாக அவன் பெரும் பொருட்குவையைக் கப்பலில் வைத்துக்கொண்டு கடல் வழியாக வந்தான். வழியில் கப்பல் உடைந்து பொருள் அழிந்ததுடன் அவனும் அவன் நண்பர்களும் இறந்தொழிந்தார்கள். மேரியானா தன் ஒப்பற்ற தமையனையும், உறவினரையும் இழந்தாள். ஆனால், இவ்வேஞ்செலோ அதனைப் பெரிதாக எண்ணாமல் அவள் பொருள் போனதையே பெரிதாகக் கருதினான். மேலும், பொருளுக்காகவே அவளை அவன் மணந்தவனாதலால் அவளைப் பல கொடுமைகளுக்கு உட்படுத்தி இறுதியில் அவள் தீ நடத்தையுடையவள் என்று பொய்க்குற்றம் சாட்டித் தள்ளிவைத்து விட்டான்.

‘அப்பேதை மாது தீமையே தரும் அக்கணவனிடமே உயிர் வைத்து நலிகின்றாள். தன் உயிரைத் தான் மாய்த்துக் கொண்டால் கூட அவனுக்குத் தீவினைப்பயன் வருமே' என்று அஞ்சுகின்றாள்.

'ஏஞ்செலோ இத்தகைய கொடியன்.

‘ஆனால் இப்போது, நீ அவன் சொல்வதற்கிணங்குவதாக நடித்து இரவு வரும்படி சொன்னால், உனக்கு மாறாக அவளை அனுப்ப நான் எண்ணங் கொண்டுள்ளேன்.'

இஸபெல் முதலில் இச்சூழ்ச்சிக்கு இணங்கவில்லை யாயினும், நால்வழியும் ஆராய்ந்து அது தீமையற்றது எனக் கண்டு இணங்கினாள்.