சேக்சுபியர் கதைகள் - 2
(255
உண்மையை ஆராய முயன்றான். இத்தகைய நேரங்களில் நடுநிலை உண்மை காண்பது அருமை. எப்படியும் அமைதியை நிலைநிறுத்துவதிலேயே கண்ணாயிருந்த இருதிறத்தாரையும் புண்படுத்தாமல் தீர்ப்பளிக்க விரும்பி, ரோமியோவை நகரினின்றும் துரத்திவிட்டான்.
தலைவன்
நகரெங்கும் பரவிவிட்ட இச்செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக ஜூலியட்டின் செவிகளிலும் புகுந்தன. அச்செய்திகளுக்கு மாறாக உருக்கிய நாராம் அவள் காதில் பாய்ந்திருந்தால் அவள் அதனைப் பொருட் படுத்தியிராள். 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்னுமாறு போல டைபால்டு அவள் உறவினனானதால், அவன் குற்றம் முதலில் அவள் கண்ணுக்குப் படவில்லை. அவள் சீற்றமனைத்தும் முதலில் ரோமியோவிடமே சென்றது. அவன் காதலனாகவே வந்தான் என்பதை மறந்து, தன் மைத்துனனுக்குக் காலனாகவே வந்தான் என்று வைதாள். ஆனால், முதல் எழுச்சி தணிந்ததன்பின், ரோமியோவின் காதலைப் பற்றிய நினைவும் அவனுடைய நற்குணமும் நடையும் அவள் கண்முன் நின்று அவள் சீற்றத்தைத் தணித்தன. அச்சண்டையை நேரில் பார்த்த அவள் தோழியர் சிலர் அவனுடைய நேர்மையையும் வீரத்தையும் போற்றியதை அவள் செவிகுளிரக்கேட்டாள். மேலும் அவன் கூடியவரை டைபால்டை எதிர்க்காமலே இருந்தான் என்றும், டைபால்டு தன்னைக் கோழை என்று அவமதித்த பின்னரே வேண்டாவெறுப்பாகச் சண்டையில் நுழைந்தான் என்றும் அவள் அறிந்தபோது, அவன் மீதிருந்த சீற்றம் எல்லாம் பாராட்டாக மாறியது. 'ஆ என் காதலின் தகுதியை நானே குறித்துக் கொண்டேனே! நான் இப்பெருந்தகை வீரனுக்குத் தகுதியுடையள் அல்லள்' என வருந்தினாள். மேலும், 'என் மைத்துனன் ஓர் உதவாக்கரை. அவன் இறந்தது கூடப் பெரிதன்று; என் ரோமியோவுக்கு அவன் ஊறு செய்திருந்தால்...ஓ அதை நான் எவ்வாறு பொறுப்பேன்' என நினைத்து அவள் அவன் செய்கைக்காக வருந்தாமல் நன்றி செலுத்தக்கூடத் தொடங்கினாள்.
ரோமியோவுக்குத் தான் நாடுகடத்தப்பட்ட செய்தி பேரிடி போன்றிருந்தது. தூக்குத் தீர்ப்புக்கூட அவனுக்கு அவ்வளவு கொடிதாகத் தோன்றியிராது. ஏனெனில், அவன் ஜூலியட்