சேக்சுபியர் கதைகள் - 2
257
செட்டியைக் குடிகெடுத்த வெள்ளி; இன்று உன் அமைதியைக் கெடுக்கவந்தது போலும்!' என்றாள்.
ஆனால் பொய்யின் துணையால் தன்னையே எத்தனை தடவை வஞ்சிக்க முடியும். கிழக்கு வெளுத்தது. சின்னஞ்சிறு பறவைகள் தம் பெற்றோரது பிரிவஞ்சிக் கலகலத்தன. இனித் தாம் பிரிந்தேயாக வேண்டும் எனக் கண்டனர் காதலர். ஆனால், அவர்கள் பிரிந்தாலும் அவர்கள் உடல் பிரியமாட்டேன் என்று முரண்டின. கன்றைவிட்டுச் செல்லும் ஆ போன்று மீண்டும் மீண்டும் வருவான் ரோமியோ, கருத்தை இழந்தவள் போன்று மீண்டும் மீண்டும் அவனை அழைத்துப் பேசுவாள் ஜூலியட். இங்ஙனம் காலம் தாழ்த்துவதால் காதலனுயிருக்கு இடுக்கண் என்பதை ஓர்ந்து அவள் அவனை எச்சரித்து, 'மனம் கவல வேண்டா; நான் நேற்றுவரை சிறு பெண். இன்று உன் காதலால் பெரியவளாய் விட்டேன். நாம் ஒன்றுபடும் நாள்வரை நான் ஆண்மையுடன் பிரிவைப் பொறுத்திருப்பேன். நீ கவலையற்று அந்நன்னாளுக்கான ஏற்பாடுகளைச் செய்க' என்று கூறி, அவனை அனுப்பினாள். அவனும் நாள்தோறும் தவறாது தன் நிலைமையையும் காதலையும் கடிதமூலம் வரைவதாக உறுதி கூறிச் சென்றான்.
5. துறவியின் திட்டமும் முடிவும்
ஜூலியட்டின் அறையினின்று கீழிறங்கிய பின் ஜூலியட் கண்ணுக்கு அவன் அவ்வறையிருளில் புதையுண்டு போவது போல் தோற்றியது; அத்தீய நினைவை அவளால் விலக்கக்கூட வில்லை. அதேபோன்று அவன் கண்ணுக்கு அவள் முகில்களிடையே மறைவது போல் தோன்றினாள். இத்தகைய நினைவுகளுக்கிடங் கொடுக்காது அவன் விரைந்து நகரை விட்டு நீங்கினான்.
அதுமுதல் அவர்கள் தீவினை அவர்கள் காதலின் போக்கில் வந்து குறுக்கிட்டதென்ன வேண்டும். ஜூலியட் காதலாலும், துயராலும் அடைந்த மாறுதல்களை அவள் தாய் தந்தையர் கவனியாமலில்லை. பெண் பெரியவளாய் விட்டாள். அவள் உள்ளம் உலைவுறத் தொடங்கிற்று எனக் கண்டு அவர்கள் அவள் மணவினையை விரைவில் முடிக்க வேண்டுமென நினைத்தனர்.