உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

285

ரிச்சர்டின் மனைவி பிரான்சு நாட்டரசனுடைய உடன்பிறந்தாள் ஆவள். அவள் சூது வாதற்றவள். அன்பும் அருளும் பொருந்தியவள். அவள் அரண்மனையில் தனியே தன் கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளைச் சுற்றிலும் அரசியல் புயல் குமுறியடிக்கக் காத்திருந்தது. அதனிடையே, பூந்தோட்டத்தில் பொலிந்தொளிர வேண்டும் மலர்போன்ற அவள், வற்றற்பாலையில் வெயிலில்கிடந்து வாடினதுபோல் வாடலானாள். மாசற்ற அவள் உள்ளத்தில்கூட உலகைச் சுற்றியடிக்கும் அப்புயலின் தொலைவான எதிரலை தட்டிற்று. ரிச்சர்டின் பெயர் மதிப்பின்றி ஆங்காங்கு அடிபடுவதும் மக்களது நடமாட்டத்திலும் பேச்சிலும் ஏதோ அமைதியின்மையும் பரபரப்பும் காணப்படுவதும் அவள் உள்ளத்தின் தூய அமைதியைக் குலைத்து அதில் இன்னதென்று விளங்காத ஒரு நுண்ணிய கவலையை உண்டு பண்ணிற்று. அதனால் அவள் ஊணும்தடைப்பட்டது. உறக்கமும் தடைப் பட்டது. தோட்டத்ததிலேனும் சென்று உலாவலாம் என அவள் புறப்பட்டாள்.

அவளது தோட்டத்தில் அன்று தோட்டக்காரனுடன் அவன் நண்பர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். தோட்டத்தின் நேர்த்திகண்டு நண்பர்கள் தோட்டக்காரன் திறத்தை மெச்சினர். அப்போது அவன் மகிழ்வதற்கு மாறாகக் கோணிய முகத்துடன், "அன்பரீர், இத்தோட்டத்தை நீங்கள் மெச்சுவதற்கு மாறாகப் பழித்திருக்க வேண்டும். இதன் நேர்த்தி கொண்டு என்ன பயன். இன்றைய நம் இங்கிலாந்து இதனினும் பெரியதொரு தோட்டம் எனலாம். அதுவன்றோ நேர்த்தியாயிருக்க வேண்டும்? ஆனால் அஃது அங்ஙனம் இல்லையே! அதன் தோட்டக்காரன் நல்லவனும் நன்முயற்சி உடையவனுந்தான். ஆனால், பூவை வளர்த்துப் புழுவையும் வளர்த்துவிட்டது போல் நாட்டுமக்களிடம் காட்டும் அதே அன்பை அவர்கள் உயிரை உறிஞ்சும் சமயசஞ்சீவிகளிடமும் காட்டுவதால் நாட்டை அவன் அவர்களுக்கு இரையாக்கி விட்டான். மேலும். பெரும் மக்களைக் களைகள் போல் வளரவிட்டுப் பொதுமக்களாகிய பயிர்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியும் வந்திருக்கான். தன் கவனக்குறைவால் நேர்ந்த தீங்குகளைப் பாவம் அவன் அறியான்!