உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அப்பாத்துரையம் – 37

அவனிடம் அன்பு செலுத்திய ஓர் உயிர் அவனிடம் நம்பிக்கை கொண்ட ஓர் உயிர் நீங்கியபின், அவன் வாழ்தலை விரும்பு வானோ? சாதலையே விழைந்தான். என்ன என்னவோ எண்ணி மனக்கோட்டை கட்டிவந்த மாக்பெத் எல்லாவற்றையும் வெறுத்தான். அரசுரிமையைப் பெறும்பொருட்டு பலருடைய வாழ்வைக் குலைத்த மன்னன் உயிருடன் வாழும் ஓர் உரிமையையும் இழக்க எண்ணினான்.

5. காடு மலை நோக்கி வருதல்

அப்போது, மால்கம் அவனை எதிர்க்கும் பொருட்டு இங்கிலாந்தில் இருந்து பெரும்படையுடன் புறப்பட்டு வந்தான். அதனை அறிந்த மாக்பெத் இழந்த ஊக்கத்தை மீண்டும் எய்தினான், “பர்னம் காடு பெயர்ந்தது வரும்வரை எனக்கு அழிவில்லை என்று ஆவி கூறியது பொய்யாகுமோ? யார் வரினும் வருக; அஞ்சாது கொன்று குவிப்பேன். ஒரு கால் நான் மாள நேர்ந்தாலும், என் மனைவியைப் போலவே இறப்பேன்? இறுதிவரைக்கும் போர் செய்து கொண்டே உயிர்விடுவேன். ஆனால், காடு பெயர்ந்து வரப்போவதும் இல்லை; நான் அழிவதும் இல்லை,” என்று அவன் எண்ணினான். மால்கம் வருகையை எதிர்நோக்கியவனாய்ப் போருக்குச் சித்தமாக இருந்தான்.

அவன் இருந்த அரண்மனை பகைவரால் அழிக்கலாகாதது; முற்றுகைக்கு எளியது அன்று. அத்தகைய அரண்மனையில் மாக்பெத் இருந்தான். அதை நோக்கி மால்கம் படை வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அது நெருங்கி வந்துவிட்டதைக் கண்ட தூதன் ஒருவன், விரைந்து சென்று மாக்பெத் முன்னிலையில் நடுநடுங்கி நின்றான். ஒன்றும் கூறமுடியாமல் நடுங்கிக்கொண்டு நின்ற தூதனை நோக்கி, "என்ன செய்தி? உடனே சொல்," என்றான் அரசன். “மலைமேல் ஏறிக் காவல் புரிந்து வரும்போது, பர்னம் காட்டை நோக்கினேன். அது நகர்ந்து வருதலைக் கண்டேன்,” என்றான் அத்தூதன். அரசன் அவனைப் பொய்யன் என்று வெறுத்துரைத்து அனுப்பி விட்டான்.