உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

63

பொருட்படுத்தமாட்டேன். இந்தச் சிறையிலிருந்து கொண்டே அந்த அழகியை நாள்தோறும் ஒருமுறை பார்க்கக் கூடுமானால், அதுவே போதும்,' என்றான்.

பிராஸ்பிரோ பெர்திநந்தை நீண்ட நேரம் சிறையில் வைத்திருக்கவில்லை; சிறிது நேரத்தில் அவனை வெளியே கொண்டு வந்து கடுமையானதொரு வேலையைச் செய்யும்படி கட்டளையிட்டான்; அவனுக்கிட்ட வேலையின் கடுமையைத் தன் மகள் அறியுமாறு செய்தான்; பிறகு, தான் கற்கப் போவதாகக் காட்டிக்கொண்டு, மறைந்து நின்று இருவரையும் கவனித்தான்.

பளுவான மரத் துண்டுகளை அடுக்கும்படியாகப் பிராஸ்பிரோ அவனுக்குக் கட்டளையிட்டிருந்தான். அரச குமாரனுக்குக் கடுமையான வேலை செய்து பழக்கம் இல்லை. ஆகையால், அவன் சற்று நேரத்தில் மிகவும் களைத்துப் போனான். தன் காதலன் நிலையைக் கண்டு, “அந்தோ! இவ்வளவு வருந்தி உழைக்காதே, என் தந்தை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று மணி நேரம் வெளியே வாரார். ஆகையால் நீ ஓய்வு கொள்ளுமாறு வேண்டுகிறேன்,” என்றாள்.

அதற்குப் பெர்திநந்து, "அன்புள்ள பெண்மணியே! நான் அவ்வாறு செய்தல் கூடாது. ஓய்வு கொள்ளுமுன் என் கடமையை முடித்தாக வேண்டும்,” என்றான்.

"நீ வாளா இரு. உன்பொருட்டு நான் மரத்துண்டுகளை எடுத்து அடுக்குகிறேன்,” என்று மிராந்தா மொழிந்தாள். பெர்திநந்து அதற்கு உடன்படவில்லை. மிராந்தா துணை செய்யப்போய் இடையூறாக ஆனாள். எவ்வாறு எனில், அவர்கள் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த படியால், வேலை விரைந்து முடியவில்லை.

அவனுடைய காதலைச் சோதித்து அறிவதற்காகவே பிராஸ்பிரோ இந்த வேலையைச் செய்யுமாறு ஏவினான். ஆனால், மிராந்தா எண்ணியபடி அவன் படித்துக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதற்காகக் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.