136
அப்பாத்துரையம் - 39
பெரிய கோழை என்று நன்றாய்த் தெரிகிறது. அது தானாக வெளிவராது. போய் ஒழிப்போம். வாருங்கள்” என்று அவன் முழங்கினான்.
"நம் நடிப்பின் சிறுமை எங்கே, பாரத வீரன் வீரத்தின் பெருமை எங்கே?" இந்த எண்ணம் அவர்கள் நெஞ்சின் ஆழ்தடத்தில் சுருக்கென்று தைத்தது. ஏனென்றால் இந்த வெளிச்சத்தில்கூட அச்சம் அவர்களை விடவில்லை. ஆனால் பாரத வீரன் அஞ்சா நெஞ்சம் அவர்களுக்குச் சிறிது தெம்பளித்தது.
பாரத வீரன் முன்னே வீறுடன் சென்றான். அவனை ஒட்டி, பதுங்கிப் பதுங்கி, மற்றவர்கள் ஒவ்வொருவராகப் பின்னால் சென்றனர்.
ஆனால், அங்கே எவர் வீரத்துக்கும் தேவையில்லை. பந்தத்தின் வெளிச்சத்தில் அந்தரத்தில் தொங்கிய உருவத்தை அவர்கள் கண்டார்கள். பாரத வீரன் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அது பேயுமல்ல. மனித உருவமும் அல்ல. தலையற்ற ஒரு கவசமே. பாரத வீரன் தவிர, மற்றவர்கள் தம் அச்சத்தை எண்ணி வெட்கமடைந்தார்கள்.
கவசம் துருப்பிடித்திருந்தது. ஆனால் அது ஒருபுறமாகத் தான் இற்றுப்போய் இருந்தது. தலையோடும் முகப்பும் முற்றிலும் பொடிந்துபோய் இருந்தன. அதைத் தட்டியவுடன் முதுகுப் பகுதி தகர்ந்தது. ஆனால் வியக்கத்தக்க வகையில் மற்றப் பகுதிகள் எல்லாம் உரமுடனிருந்தன. அதை மெருகிட்டபின் அது அருமையான கவசமாயிற்று. பாரத வீரன் நெடிய உடலுக்கு அது முற்றிலும் சரியாக வாய்த்திருந்தது.
தேடிவந்த பொருள்களில் மற்றொன்று கிடைத்து விட்டது. அவர்கள் நம்பிக்கை வளர்ந்தது. மகிழ்ச்சி மீண்டும் தோன்றிற்று. இடையில் தட்டிய சபலத்தை மணிவண்ணன் அறவே மறந்தான். கவசத்தைப் பெருமிதமாகக் கைப்பற்றியவண்ணம் அவர்கள் சுரங்கத்திலிருந்து வெளிவந்தார்கள்.
வெற்றிமேல் வெற்றியாக அவர்களுக்கு இன்னும் ஒரு நற்பேறு காத்திருந்தது. மதிலருகே இரண்டாள் உயரமுடைய ஒரு கறையான் புற்று இருந்தது. பாரத வீரன் அவ்வளவு உயரமான