உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

77

அவன்மீது பரிவு கொள்ளச் செய்தது. மனைவியும் மக்களும் அவன் பக்கம் சாய்வதை அவன் ஏற்கெனவே அறிந்திருந்தான். இப்போது அவனும் அருண்மொழியைத் தன் குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ள உள்ளூர இணக்கம் கொண்டான்.பாடுமாங் குயிலையும் அன்பரசியையும் போலவே அவனும் படிப்படியாக அருண்மொழியிடம் நேச உணர்ச்சியுடன் பழகினான். குடும்பத்தில் ஒருமனமும் இன்னமைதியும் மெல்லப் படர்ந்தன.

பண்ணன் சேந்தனும் அவன் மனைவி தையல் நாயகமும் ஒருநாள் பண்ணன் பாடிலியின் இல்லத்துக்கு வந்திருந்தனர். அருண்மொழி மாமன் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினனாக ஒட்டி வாழ்வது கண்டு பண்ணன் சேந்தன் வியப்புற்றான். ஆனால் அவனைவிட அவன் மனைவிக்கு இது கசப்பாக இருந்தது. அவளுக்குக் குழந்தை இல்லாததால், பண்ணன் பாடிலியின் குடும்பத்தையே தனதாக்கி ஆள எண்ணியிருந்தாள். அதன் செல்வ நிலையையும் மதிப்பையும் உயர்த்தி வேறோர் உயர் குடும்பத்துடன் அன்பரசியை இணைக்க வேண்டுமென்பது அவள் பேரவாவாயிருந்தது. வாரியூரில் நகரவைத் துணைத் தலைவராயிருந்த குருகூரார் செல்வத்தாலும் பதவியாலும் உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். அவர் குடியையே தையல் நாயகம் அன்பரசிக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். காசு பணமற்ற ஓர் ஏழை இளைஞனுக்காகப் பெருந் தொடர்பைக் கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. மெல்லப் பண்ணன் பாடிலியின் உள்ளத்தையும் பாடுமாங்குயிலின் உள்ளத்தையும் இத்திசையில் திருப்ப அவள் முயற்சி செய்தாள்.

"பாடு, உன் இரக்க உள்ளத்துக்கு நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால் என்றும் நீ இப்படி ஒருவனை வைத்துத் தற்காக்க முடியுமா? மேலும் நம் தொழிலகத்திலே இருந்தால் அவன் தனக்கேற்ற நல்ல முயற்சியில் எப்படி ஈடுபட முடியும்? விரைவில் அவனே ஒரு தொழில் பார்க்கும்படி தூண்டி அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணையும் தெரிந்தெடுக்கும்படி விடுவதுதானே" என்றாள் தையல்நாயகம்.

பாடுமாங்குயில் அவள் மனப்போக்கை ஓரளவு ஊகித்து உணர்ந்தாள். ஆனால் அதை உணர்ந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவன் எனக்கு அண்ணன் பிள்ளை. உங்கள்